உ.பி., சம்பல் மசூதி விவகாரத்தை கண்டித்து தஞ்சையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்
மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மை முஸ்லீம்களை பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்: உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மசூதி விவகாரத்தை கண்டித்து தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் அருகில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தெற்கு மாவட்டம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் ஜூம்மா பள்ளிவாசல் முன்பு நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெய்னுல் ஆபீதீன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மத வழிபாட்டுத்தல சட்டம் 1991 நடைமுறைபடுத்த வேண்டும். சம்பல் மசூதி கலவரத்தில் உச்சநீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மை முஸ்லீம்களை பாதுகாக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் எம்எல்ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம், மாநகர மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பி.ஜி.ராஜேந்திரன், திமுக பொருளாளர் எல்.ஜி. அண்ணா, மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் அப்துல் நசீர், இடதுசாரி பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற தொகுதி செயலாளர் எஸ்.அபுசாலிஹ் நன்றி கூறினார்.
மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜாமா மசூதியில் ஆய்வுப் பணிகளின்போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்குத் தீ வைத்தது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தினர். இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பதற்றம் நிலவியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூரில் இன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.