தொடர் செம்மண் திருட்டு.. லாரிகளை வளைத்து பிடித்த இந்திய கம்யூ., கட்சியினர்: தஞ்சை அருகே பரபரப்பு
செங்கிப்பட்டி அருகே தொடர்ந்து செம்மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தொடர்ந்து செம்மண் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் வளைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டி தெற்குசேத்தி கிராமத்தில் அரசு அனுமதியின்றி தொடர்ந்து செம்மண் திருடப்பட்டு வந்துள்ளது. இரவு, பகல் என எந்நேரமும் இவ்வாறு செம்மண் திருடப்பட்டு வருவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பலமுறை புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை 20-க்கும் மேற்பட்ட லாரிகளில் அரசு அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து வந்தனர். இதையடுத்து செம்மண் எடுக்கப்படும் இடத்திற்கு பொதுமக்களோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முகில்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் அய்யாராசு, மாரிமுத்து, சந்திரசேகரன், சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி மற்றும் கட்சியினர் சென்றனர்.
அப்போது தஞ்சாவூர் ஒன்றியம் குருவாடிப்பட்டி கிராமத்தில் செம்மண் எடுக்க அளிக்கப்பட்ட அனுமதியை காட்டி பாளையப்பட்டி தெற்கு சேத்தி கிராமத்தில் தொடர்ந்து செம்மண் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து செம்மண் எடுத்த வாகனங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வளைத்து பிடித்தனர். பின்னர் பூதலூர் வட்டாட்சியர் மற்றும் செங்கிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு செங்கிப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து ஒரு லாரியை மட்டும் பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக லாரி டிரைவர் இளவரசன் என்பவரை கைது செய்தனர்.
ஆனால் தொடர்ந்து செம்மண் திருட்டில் ஈடுபட்ட ரமேஷ் என்பவரையும் கைது செய்ய வேண்டும். செம்மண் எடுக்க பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் உட்பட மற்ற வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி வாக்குவாதம் செய்தனர்.
தொடர்ந்து இன்ஸ்பெக்டர் (பொ) முகமது இப்ராஹிம் புகாரில் குறிப்பிட்டவாறு விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து இந்திய கம்யூ., கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இதுபோன்று செம்மண் அரசு அனுமதியின்றி அள்ளப்படுவதால் அப்பகுதியில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் செம்மண் அள்ளிய வாகனங்கள் வெகு வேகமாக செல்வதால் விபத்துக்களும் நடக்கிறது.
பொதுமக்களுக்கு பல்வேறு விதத்திலும் இடையூறு ஏற்படுகிறது. மேலும் வேறு இடத்தில் மண் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதியை வைத்து இங்கு மண் எடுப்பது எந்த வகையில் சரியானது. அதனால்தான் இன்று வாகனங்களை சிறைப்பிடித்து போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.





















