Independence Day: மயிலாடுதுறை அருகே தேசப்பற்றை நூதன முறையில் வெளிப்படுத்திய சிறுவர்கள்
மயிலாடுதுறை அருகே சுதந்திர தினத்தையொட்டி "தேசமே எப்போதும் முதன்மையானது" என்பதை கருப்பொருளாகக் கொண்டு இந்திய வரைபடத்தை, நாணயங்கள் வைத்து நிரப்பி தேசப்பற்றை வெளிப்படுத்திய பள்ளி சிறுவர்கள்.

இந்திய தேசத்தின் 77 -வது சுதந்திர தினத்தை ஒட்டு மொத்த நாடே கோலாகலமாக கொண்டாடி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, வடகரையில் உள்ளது நேரு மெமோரியல் பள்ளி. இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனதில் தேசப்பற்றை விதைக்கும் நோக்கத்தில் இறங்கினர் பள்ளி ஆசிரியர்கள். அதனால் மாணவர்கள் புதுவிதமான முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்திய தேச வரைபடம் வரையப்பட்ட பிளக்ஸ் பேனரில், பள்ளி சிறார்கள் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நாணயங்களை அடுக்கி, தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தினர். முன்னதாக மாணவர்கள் அனைவரும் கைகளில் வண்ண மயமாக மூவர்ண பேண்டுகளையும் அணிந்திருந்தனர். தேசியக் கொடியை பிடித்து நடந்து வந்த சிறுவர்களும் "நேஷன் ஃபர்ஸ்ட், ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்" என தேசபக்தி முழக்கத்தை எழுப்பினர்.இச்சம்பவம் அங்குள்ளவர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Watch Video: தேசிய கொடி ஏற்றிய பிரதமர்.. பூக்களை தூவி வாழ்த்திய விமானப்படை ஹெலிகாப்டர்.. வீடியோ..

இதற்காக மாணவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையில் இருந்து இந்த நாணயங்களை எடுத்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 3,013 ரூபாய் காயின்களைக் கொண்டு, இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டது. இந்த சாதனை முயற்சி என்.எம்.எஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸில் பதிவு செய்யப்படவுள்ளது. முடிவில், அந்த தொகையை கல்வி அறக்கட்டளைக்கு மாணவர்கள் சார்பில் பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.

மாணவர்களின் தேசப்பற்றுடன், சுதந்திர விழாவை சாதனை விழாவாக்கிய இந்த சிறுவர்களை பாராட்டி தான் ஆக வேண்டும். இந்த சாதனை முயற்சி பாராட்டுக்குரியது.






















