ஈரப்பதத்தை உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்யுங்கள்... மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தல்
நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் 22 சதவீதம் வரை ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். தற்காலிக கொள்முதல் நிலையங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்.

தஞ்சாவூர்: ஈரப்பதத்தை உயர்த்தி உடன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்தியக்குழுவினரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.99 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு இதுவரை 1.80 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில், அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக, கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்து குவித்துள்ளனர். ஆனால் நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் சுமார் 15 நாட்களுக்கும் மேலாக மேலாக நெல்லை விற்பனை செய்ய முடியாமல் சாலைகளில் குவித்து வைத்து தவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் அவ்வப்போது தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பரவலாக பெய்தது. இதனால் மழைநீரில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகள் நனைந்தது. இதனால் நெல் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து தமிழக அரசு நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து ஈரப்பதத்தை ஆய்வு செய்ய, மத்திய அரசு தலா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்களை அமைத்தது. இதில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், தொழில்நுட்ப அலுவலர்கள் ஷோபித் சிவாச், ராகேஷ் பரலா, இந்திய உணவுக்கழக தரக்கட்டுப்பாடு அலுவலர் மோகன் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடியில் உள்ள 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை பார்வையிட்டு மாதிரிகளை சேகரித்தனர். பின்னர் ராராமுத்திரக்கோட்டை, கீழ் கோவில் பத்து, தெலுங்கன் குடிகாடு, வெட்டிக்காடு பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய புறப்பட்டு சென்றனர். அப்போது விவசாயிகள் இனியும் காலம் தாழ்த்தாமல் ஈரப்பதத்தை காரணம் காட்டாமல் விவசாயிகள் கொண்டு வந்துள்ள நெல்லை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என்று மத்தியக்குழுவினரிடம் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ் கூறுகையில், ஆலக்குடி பகுதி மிகவும் பெரியது. இங்கு நெல் உற்பத்தியை அதிக அளவில் நடக்கிறது. எனவே இங்கு நிரந்தர கொள்முதல் நிலையத்தை அமைத்து தர வேண்டும். தற்போது நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் 22 சதவீதம் வரை ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். தற்காலிக கொள்முதல் நிலையங்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய மழையால் விவசாயிகள் அறுவடை செய்த நெல் முளைத்து நாற்றாக மாறும் நிலை உள்ளது. எனவே கொள்முதலை விரைவுப்படுத்த வேண்டும். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சாலைகளில் நெல்லை குவித்து வைத்து விவசாயிகள் வேறு வேலைக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர். எனவே இந்த நிலை மாற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.





















