தஞ்சாவூரில் மழையால் சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழப்பு
திருவாயாறில், தொடர்ந்த மழையின் காரணமாக சுமார் 1000 ஏக்கருக்கு மேல் மழை நீரினால் முழ்கியுள்ளது.
கும்பகோணம் கச்சேரி சாலை என்றழைக்கப்படும் சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்றம், கோட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, கிளை சிறை, நீதிபதிகள் குடியிருப்புகள், அரசு ஆடவர் கலைகல்லுாரி, கோயில்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகம், வணிக வளாகங்கள், குடியிருப்புகள் உள்ளன. இச்சாலையில் வேலை நாட்கள் மட்டுமில்லாமல், தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். வேலை நாட்களில் அரசு அலுவலகத்திற்கும், கோர்ட்டிற்கும் வருபவர்கள், மருத்துவமனைக்கு மற்றும் பல்வேறு பணிகளுக்காக சாலையின் வழியாக சென்று வருவார்கள்.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், நீதிமன்றத்தின் அருகிலிருந்த 50 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் அடியோடு சாய்ந்தது. காலை நேரத்தில் வேப்பமரம் சாய்ந்ததால், அதிஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. வேலை நேரங்களில் மரம் விழுந்திருந்தால், சுமார் 50 பேரின் நிலை கேள்வி குறியாகும். தொடர் மழையின் காரணமாக தஞ்சாவூரை அடுத்த வல்லத்திலுள்ள முதலை முத்து வாரியில், மழை நீர் முழு கொள்ளவு எட்டியதால், பாலத்தையும் தாண்டி மழை நீர் வடியத்தொடங்கியது. ஆனால் வடிந்த மழை நீர், நடவு செய்யப்பட்ட சம்பா, தாளடி வயலுக்குள் சென்றதால், சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நாற்றுக்கள் நீரில் முழ்கியது. இதனால் அனைத்து நாற்றுக்களின் நிலை கேள்வியாகியுள்ளது.
இதே போல் திருவாயாறில், தொடர்ந்த மழையின் காரணமாக சுமார் 1000 ஏக்கருக்கு மேல் மழை நீரினால் முழ்கியுள்ளது. கும்பகோணத்தை அடுத்த பாபுராஜபுரம் ஊராட்சியில் கொட்டையூர் பகுதி தெருக்களில் மழைநீர் தேங்கி உள்ள பகுதிகளை கும்பகோண சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன்மற்றும் தண்ணீர் வடிவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதே போல் தஞ்சாவூர் கும்பகோணம் சாலைகள் பலத்த மழையினால், குண்டு குழியுமாக காட்சியளிக்கின்றது. ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் சாலையில் சிதறி கிடக்கின்றது. வாகனத்தில் செல்பவர்கள், பெயர்ந்துள்ள ஜல்லிகளில் சக்கரம் ஏறி, தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகுகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதுார் பாபநாசம், ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள நடவு செய்யப்பட்ட வயல்களில் மழை நீர் வடியாமல் தேங்கி கிடக்கின்றது. இந்நிலையில், கும்பகோணம் தாலுக்கா தேனாம்படுகை கிராமத்தை சேர்ந்த மணி மகன் கௌதமன் (28) குடும்பத்துடன் தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். தொடர் மழையினால் மற்றும் கௌதமன் மற்றும் மகள் அனன்யா (4) ஆகிய இருவர் மீது மண் சுவர் இடிந்து விழுந்து பலத்த காயமடைந்தனர். இருவரையும், அப்பகுதியினர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அனன்யா உயிரழந்தார்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் ஒவ்வொரு முறையும் துார் வாரும் பணியின் போது கண்துடைப்பிற்காக பணிகள் செய்கின்றனர். பெயரளவிற்கு மட்டும் செய்வதால், பலத்த மழையின் போது, வாய்க்கால்களில் மழை நீர் செல்லாமல் வயல்களிலேயே தேங்கி விடுகிறது. இதனால் நடவு செய்யப்பட்ட அனைத்து நாற்றுக்களின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், இனி வரும் காலங்களில் வடிகால், பாசன வாய்க்கால்களை, அளவீட்டின் படி, முறையாக துார் வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.