பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துங்கள்... போட்டா ஜியோ தஞ்சாவூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கருணை அடிப்படையிலான நியமனத்தில் அஞ்சு சதவீதத்திற்கு மேல் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற உச்சவரம்பை உடன் ரத்து செய்ய வேண்டும். அனைத்து துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்.

தஞ்சாவூர்: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்தில் அஞ்சு சதவீதத்திற்கு மேல் பணி நியமனம் செய்யக்கூடாது எனபன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டா ஜியோ சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில இலக்கிய அணி செயலாளர் ஜாகிர் உசேன் வரவேற்றார். மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாநில துணை பொது செயலாளர் ஜெகதீசன், மாவட்டத் தலைவர் அய்யாக்கண்ணு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சுரேஷ்குமார், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மதியழகன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிற்பயிற்சி நிலைய விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்பயிற்சி அலுவலர் சங்க மாநில தலைவர் பிரேம்குமார் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் அறிக்கை கொடுத்த வாக்குறுதியின் படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கருணை அடிப்படையிலான நியமனத்தில் அஞ்சு சதவீதத்திற்கு மேல் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற உச்சவரம்பை உடன் ரத்து செய்ய வேண்டும். தலைமை செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள அனைத்து பிரிவு காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பதவி உயர்வும் வழங்க வேண்டும்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், தூய்மைப்பணியாளர்கள் மற்றும் தூய்மைக்காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மாநில முன்னுரிமை எனக்கூறி வெளியிட்டுள்ள அரசாணை எண் 243ஐ திருத்தம் செய்து மாவட்ட அளவில் முன்னுரிமை வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வழங்கிய ஏழாவது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலுவை தொகையினை வழங்காமல் நிலுவையாக உள்ளது இதனை விடுவித்து நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின், சத்துண ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நாவலரசன், நில அளவு கனிக வரைவாளர் ஒன்றிப்பு தலைமை வரைவாளர் சரவணன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் குமார வேலு மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோவி.பாலாஜி நன்றி கூறினார்.





















