தஞ்சையில் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி பாதிப்பு - ஏக்கருக்கு 15 லட்சம் செலவு செய்து நாசம்
’’வெற்றிலை சாகுபடி பயிர் காப்பீடு, கடனுதவி, தொழில் நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு இயற்கை வழி உரங்கள் உள்ளிட்டவைகளை வழங்க கோரிக்கை’’
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூந்துருத்தி, திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கும்பகோணம், கோவிந்தகுடி, ஆவூர், ராஜகிரி, பண்டாரவாடை, ஆடுதுறை, கல்விக்குடி, அய்யம்பேட்டை, திருவையாறு, திருவிடைமருதுார், திருப்பனந்தாள் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் வெற்றிலை சாகுபடி செய்துள்ளனா். வெற்றிலையில் வெள்ளை, பச்சை, பீனங் வெற்றிலை வகைகள் உண்டு. வயலை வெட்டி பாத்தி கட்டி கிடங்கு வெட்டுவார்கள். அதில் அகத்தி கீரை விதை விதைத்து சுமார் 40 நாட்களில் விளைந்து பிறகு, வெற்றிலை கா்ணமாக்கி 3 கனுவை நடுவார்கள். அதன் பிறகு 40 நாட்கள் வளா்ந்து பிறகு பிஞ்சு வெற்றிலையை பறிப்பார்கள். அதிலேயே பெரிய வெற்றிலை சுமாரான வெற்றிலைகளை பறிப்பார்கள். தொடா்ந்து ஒரு ஆள் மட்டத்திற்கு வளா்ந்த பிறகு மேலே கமார் வெடித்து அதல் உள்ள மார் வெற்றிலையை பறிப்பார்கள்.
இதில் 110 வெற்றிலையை கொண்டது. ஒரு கவுளியாகும், 30 கவுளி என்பது ஒரு முட்டி எனப்படும். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வாய்க்கால்களில் துார் வாராததால், வெற்றிலை கொடியில் தேங்கியுள்ள மழை நீர் வடிவதற்கு வழியில்லை. இதனால் வெற்றிலை கொடிகள் சுமார் 100 ஏக்கர் வரை முழுவதும் சாய்ந்து விட்டது. வெற்றிலை கொடியில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை உள்ளது. வெற்றிலைக்கு தண்ணீர் அதிகமாக இருந்தால், வெற்றிலை கொடி அழுகி விடும். இதனால் வெற்றிலை சாகுபடி பெரிதும் பாதிக்கும்.
மேலும் விளைச்சலான வெற்றிலைகள் சுருங்கியும், சிறுத்தும், அழுகி விடுவதால், போதுமான விலைக்கு வெற்றிலையை விற்பனை செய்ய முடியாது. இதனால் வெற்றிலை விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.தற்போது வெற்றிலை விவசாயிகள், கடந்த சில நாட்களாக, தண்ணீர், உரம், இழப்பு போன்ற பல்வேறு பிரச்சனையால் வேறு தொழிலுக்கு மாறியதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் வெற்றிலை என்ற சூழ்நிலை மாறி, வெளியூரிலிருந்து வெற்றிலை விற்பனைக்கு வரும் நிலை உருவாகியுள்ளது.
இது போன்ற சூழ்நிலையால் வரும் நாட்களில் வெற்றிலையின் விலை அதிகமாக உயர வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் பலத்த மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு சாகுபடிக்காக செய்த செலவினங்களை இழப்பீடாக வழங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து வெற்றிலை விவசாயி திருப்பூந்துருத்தி சுகுமாறன் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் பலத்த மழையினால் 100 ஏக்கர் வெற்றிலை சாகுபடி அடியோடு சாய்ந்துள்ளது. வெற்றிலை சாகுபடி செய்யும் விவசாயிகள், அரசிடமிருந்து எந்தவிதமான பயிர் காப்பீட்டு உள்ளிட்ட எந்த உதவிகளும் பெறப்படுவதில்லை. இருந்தாலும், பல தலைமுறைகளாக செய்து வரும் வெற்றிலை சாகுபடியை செய்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவ மழையால் வெற்றிலை சாகுபடி பயிர்கள் அனைத்து சாய்ந்து விட்டன. இதனால் அனைத்தும் பயிர்கள் நாசமாகியுள்ளது. ஒரு ஏக்கருக்கு சுமார் 15 லட்சம் செலவாகும். வெற்றிலை மற்றும் திராட்சை சாகுபடிக்கு தான் அதிகமாக செலவாகும். இது போன்ற நிலையால் வெற்றிலை விலை உயர வாய்ப்புள்ளது. எனவே, வெற்றிலை சாகுபடி பயிர் காப்பீடு, கடனுதவி, தொழில் நுட்பங்கள், பயிர் பாதுகாப்பு இயற்கை வழி உரங்கள் உள்ளிட்டவைகளை வழங்கவேண்டும். மழையினால் பாதிக்கப்பட்ட வெற்றிலை சாகுபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.