400க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.35 கோடி மோசடி செய்த கணவன், மனைவி கைது
மர்ஜித் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் 1000 பேர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் 400 பேர் இதுவரை புகார் அளித்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும். அதிக தொகை பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறி 400க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து ரூ.35 கோடி மோசடி செய்த கணவன், மனைவியை தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரை சேர்ந்தவர் மர்ஜித் அலி (44). இவரது மனைவி ஹவா பீவி(40). இவர்கள் 2016 ம் ஆண்டு மர்ஜித் ட்ரான்ஸ்போர்ட் என்ற நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தனர். இவர்களிடம் ரூ.1 லட்சம் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.2,500 லாபத் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதை நம்பி ஆயிரத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் இவர்களது நிறுவனத்தில் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. முதலில் மாதந்தோறும் லாபத் தொகையை வழங்கியவர்கள், 2019ம் ஆண்டுக்கு பிறகு லாபத் தொகை வழங்கவில்லை.
இதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் 2021ம் ஆண்டு தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து அய்யம்பேட்டை சக்கராப்பள்ளியை சேர்ந்த பர்ஹான் சப்ரீன் உள்ளிட்ட 400 பேர் போலீசில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் ரூ.35 கோடிக்கு மேல் பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு லாபத் தொகை தராமல் ஏமாற்றியதாக மர்ஜித், ஹவா பீவி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல் துணை கண்காணிப்பாளர் பூரணி தலைமையில் ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் செந்தமிழன், அப்னா அஞ்சு, தலைமை காவலர் சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப் படையினர் தம்பதியினரை பல இடங்களில் தேடினர். இந்நிலையில் அவர்கள் இருவரும் மதுரை அருகே கப்பலூரில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தனிப் படையினர் அங்கு சென்று கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: மர்ஜித் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் 1000 பேர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் 400 பேர் இதுவரை புகார் அளித்துள்ளனர். பணம் செலுத்தி ஏமாந்தவர்களில் இதுவரை புகார் கொடுக்காமல் யாராவது இருந்தால் உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி அருகே ரெட்டிப்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்யலாம்.
மர்ஜித் அலி, ஹவா பீவி இருவரும் தங்களது நிறுவனத்துக்கு சொந்தமான 18 பேருந்துகள், 20 கார்கள், 4 ஆட்டோக்கள், 5 இருசக்கர வாகனங்களை முதலீட்டாளர்களுக்கு தெரியாமல் விற்பனை செய்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நிலம், வீடுகளை வாங்கியுள்ளனர். இந்த சொத்துக்களை எல்லாம் நாங்கள் கையகப்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















