விளைச்சலை குறைத்த கடும் பனிப்பொழிவு: தஞ்சையில் விலை உயர்ந்தது வாழை இலை
வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக போதிய விளைச்சல் இல்லாமல் வாழை இலை அறுவடை பாதியாக குறைந்துள்ளது. இருப்பினும் கேரளா, வெளி மாவட்ட வியாபாரிகள் வாழை இலை கொள்முதலுக்காக தஞ்சையை நோக்கி படையெடுப்பதால் விலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியான திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், மேலத்திருப்பூந்துருத்தி, வளப்பக்குடி, வடுகக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதே போல் வாழை இலைகள் சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு 25 லட்சம் இலைகள் அறுவடை செய்யப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலும் சென்னைக்குத்தான் தனியார் பஸ்கள் மற்றும் லோடு ஆட்டோக்களில் அனுப்பி வைக்கப்படும்.
விளைச்சலை குறைத்த கடும் பனிப்பொழிவு
இந்த நிலையில் தற்போது குளிர்காலம் என்பதால் கடும் பனிப்பொழிவு காணப்படுகின்றன. இந்த பனிப்பொழிவு காரணமாக வாழை இலை விளைச்சலும் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக தென்மாவட்டங்களில் வாழை இலை விளைச்சல் முற்றிலும் குறைந்துள்ளதால் அங்கு வாழை இலை கட்டு 7 மடங்கு வரை விலை உயர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்திலும் கடும் பனிப்பொழிவு காரணமாக வாழை இலை விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் வாழை இலை அறுவடை பாதியாக குறைந்துள்ளது. 25 லட்சம் வாழை இலைகள் தினமும் அறுவடை செய்யப்படும் பகுதிகளில் தற்போது 10 முதல் 15 லட்சம் அளவுக்குத்தான் வாழை இலைகள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.
விலை உயர்ந்தது... வெளி மாநில வியாபாரிகளும் குவிந்தனர்
இதனால் தஞ்சை பகுதிகளிலும் வாழை இலைகள் விலை உயர்ந்து வருகிறது. மேலும் கோவில் விழாக்கள், புத்தாண்டு, அய்யப்ப பக்தர்கள் பூஜை போன்றவற்றின் காரணமாக வாழை இலைகளின் பயன்பாடும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒருபுறம் இலையின் விலை உயர்ந்தாலும், மறுபுறம் விளைச்சலும் குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்புதான் ஏற்பட்டுள்ளது.
தற்போது தஞ்சை பகுதிகளில் ஏடு இலை ஒன்று ரூ.2.50-க்கு விற்ற நிலையில் விலை உயர்ந்து ரூ.3.50-க்கும், ரூ.3-க்கு விற்ற நுனி இலை ரூ.4-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தற்போது தஞ்சையை நோக்கி வெளி மாவட்ட வாழை இலை வியாபாரிகள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். குறிப்பாக திருவையாறு பகுதிக்கு தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் தஞ்சையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இதனால் வாழை இலை விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வாழை விவசாயி வடுகக்குடி மதியழகன் கூறுகையில், தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக வாழை இலை விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இலை விளைச்சல் குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினாலும், விலை உயர்வு சற்று ஆறுதலை அளித்து வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டம், கேரளா மாநிலத்தில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து திருவையாறு பகுதிகளில் வாழை இலையை கொள்முதல் செய்து செல்கிறார்கள். இதனால் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.





















