புராண வரலாற்றுக்கு மாறாக சீர்காழியில் கொட்டித்தீர்த்த மழை... நீரில் மிதக்கும் கோயில்..!
நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக சீர்காழி சட்டநாதர் கோயில் முழுவதும் மழைநீரில் முழ்கியுள்ளது.
கடந்த 3 தினங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் கோரத்தாண்டவம், நேற்று காலை முதல், வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கொட்டித்தீர்த்து வருகிறது. இதில், அண்மைக்காலமாக வரலாறு காணாத அளவில் சீர்காழியில் மட்டும், 24 மணி நேரத்தில் 44 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் சில தினங்களுக்கு முன் உருவான முதல் குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, பகுதியாக மாறி, பிறகு தீவிர காற்றழுத்த பகுதியாக மாறி, தற்போது மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. சீர்காழியில் மட்டும் அண்மைக்காலத்தில் இதுவரை பதிவாகாத அளவுக்கு, நேற்று காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டும் வெறும் 14 மணி நேரத்தில் 30 செ.மீ. மழை பதிவானது. கடந்த 24 மணி நேர அளவில் பார்க்கும்போது, 44 செ.மீ மழை சீர்காழியில் மட்டும் பெய்துள்ளது.
இந்த உலகத்தை சுற்றி வளைந்து இருக்கும் பெருங்கடல் பேரீடர் காலத்தில் பொங்கி எழுந்து உலகை அழித்தபோது, உமாமகேசுவர் (சிவன்) பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு ( சீர்காழிக்கு) வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது ஐதீகம். உலகமே தண்ணீரில் மூழ்கிய போது இங்கு மட்டும் தண்ணீர் வரவில்லை என்று புராண வரலாறு கூறுகிறது. இதனால் சீர்காழிக்கு திருதோணிபுரம் என்ற பெயரும் உண்டு. மேலும், சீர்காழி நகர்பகுதி பெரும் வெள்ளபாதிப்பு ஏற்பட்டது இல்லை என்பதும் வரலாறு. இந்தகைய சிறப்பு மிக்க சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு நேற்று மழை பெய்து இந்த வரலாற்றை மாற்றியுள்ளது என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில் இந்த வரலாறு சிறப்பு மிக்க சீர்காழியில் சட்டநாதர் கோயில் முழுவதும் நேற்று இரவு பெய்த கனமழையால் தற்போது மழை நீரில் சூழ்ந்து உள்ளது. கோயில் குளம் முழுவதும் நிரம்பி, குளம் இருக்கும் இடம் தெரியாமல் கோயில் உட்புறம் வெளிப்புறம் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிகழ்வு சீர்காழி மற்றும் இன்றி ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக திருக்கடையூர் ஆலயத்தின் பிரகாரங்களில் சூழ்ந்த தண்ணீர்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக தரங்கம்பாடி பொறையார் பகுதிகளில் 20 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பெய்தது. இந்த மழை காரணமாக புகழ் பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் சேமத அமிர்தகடேஸ்வரர் ஆலயம் ஆலயத்தில் பிரகாரங்களில் தண்ணீர் சுழற்ந்து உள்ளது.
இந்த தண்ணீர் காரணமாக ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலையில் தண்ணீரை உடனடியாக மின்மோட்டார்கள் மூலம் இறைத்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் என்று தருமபுரம் ஆதீனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN rains: மழை மாவட்டமான மயிலாடுதுறை...மிதக்கும் சீர்காழி.. ஒரு நாளில் 43 செ.மீ.மழை பதிவு!