அரசு பொது சேவை மையத்தை வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் - தஞ்சை கலெக்டரிடம் மனு
மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு பேட்டரி ஆட்டோ வாங்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அந்த மானியத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக மாநில அரசு மானியம் வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்: தமிழக அரசின் பொது சேவை மையத்தை மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு வழங்காமல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு வழங்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு பேட்டரி ஆட்டோ வாங்க மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அந்த மானியத்தோடு மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கூடுதலாக மாநில அரசு மானியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் பொது சேவை மையத்தை மாற்றுத்திறனாளி அல்லாத நபர்களுக்கு வழங்காமல் வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இது வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தொழிலாக அமையும். அதற்கு தாங்கள் தான் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆவணம் செய்ய வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 பிரிவு 40 ல் தமிழ்நாடு அரசின் அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறுகிறது.மேலும் அரசாணை எண் 21 ம் இதையே வலியுறுத்து வருகிறது அப்படி இருந்தும் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இதை நடைமுறைப்படுத்த அனைத்து துறை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிகர் சங்க பிரதிநிதிகளை அழைத்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். சுங்கச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் உறவினர்களின் கார் அல்லது வாடகை காரில் பயணம் செல்லும் போது மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கியுள்ள UDID அட்டையை வைத்து மாற்றுத்திறனாளிகள் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணவிலக்கு அளிக்க அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
அனைத்து அரசு துறைகளிலும் பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளி பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஒவ்வொரு அரசு துறையிலும் குறைதீர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 பிரிவு 23 ல் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த பிரிவை நடைமுறைப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை எண் 16 யை பிறப்பித்து உள்ளது. அனைத்து துறைகளிலும் குறைதீர் அதிகாரிகளை நியமித்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான குறைதீர் அதிகாரிகளின் விவரங்களை மாவட்ட ஆட்சியரக இணையத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட குழு உறுப்பினர்கள் கூட்டம் தேர்தல் சார்ந்த ஆலோசனைகளை பெறும் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் போது அதன் உறுப்பினர்களுக்கு தவறாமல் அழைப்பு விடுக்க வேண்டும்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள மகாராஜா சமுத்திரத்தில் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசிக்கிறார்கள். இப்பகுதியின் பேருந்து நிறுத்தமான புதுரோடு பேருந்து நிறுதத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். இங்கு குப்பை தொட்டி அமைத்து தினமும் குப்பைகளை சுகாதார பணியாளர்களை கொண்டு தூய்மை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, மாவட்ட பொருளாளர் சுதாகர், பட்டுக்கோட்டை ஒன்றிய பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.





















