தஞ்சை கலெக்டரின் மனசு ஆயிரம் தாய்க்கு சமம்... நெகிழ்ச்சி அடையும் அதிகாரிகள்: எதனால் தெரியுங்களா?
பெற்றோர் இல்லாத குழந்தைகளும் எக்காரணத்தை கொண்டும் கல்வியில் இடை நின்று விடக் கூடாது என்பதற்காக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பெரும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார்.

தஞ்சாவூர்: பெற்றோரை இழந்த மாணவர்களின் படிப்பு எந்த வகையிலும் பாதியில் நின்று விடக் கூடாது என்பதற்காக பெற்றோர் இல்லாத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் படிப்புக்கு உதவி செய்வதற்கான பெரும் முன்னெடுப்பை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம். அவரது இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டுக்களையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் இல்லாத குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் படி வருவாய் துறையினருக்கு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். அதன்படி கடந்த சில நாட்களாக கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி உட்பட மாவட்டம் முழுவதும் அனைத்து தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட வருவாய் துறை அலுவலர்கள் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் பெற்றோர் இல்லாத பள்ளிக் குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதன் மூலம் தாய், தந்தை இருவரும் இல்லாத மாணவ, மாணவிகள் 594, தாய் மட்டும் இல்லாதவர்கள் 2,417, தந்தை மட்டும் இல்லாதவர்கள் 9,342 என மொத்தம் சுமார் 12,353 மாணவ, மாணவிகள் உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. இப்படி தாய், தந்தை இல்லாத மாணவ, மாணவிகள் அதிகளவு அரசுப் பள்ளிகளில்தான் படித்து வருகின்றனர். இவர்களின் படிப்பு பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வகையிலும் பாதிப்படைந்து இடை நிற்றல் இல்லாமல் தொடர்ந்து படிப்பதற்கான உதவியை செய்து கொடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பெரும் முயற்சியை முன்னெடுத்து வருகிறார்.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், சிறந்த கல்வியை கற்பதன் மூலம் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளலாம். தாய், தந்தை இருவரது கவனிப்பில் உள்ள மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்தி கரை சேர முறையான வழிகாட்டுதல்கள் கிடைக்கும். ஆனால் தாய், தந்தை மற்றும் இருவரும் இல்லாத குழந்தைகளுக்கு தகுந்த கல்வி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
அதுவும் வறுமை பிடியில் சிக்கியிருக்கும் குழந்தைகளுக்கு பள்ளி இடை நிற்றல் இல்லாத முழுமையான சிறந்த கல்வி கிடைக்குமா என்பது கேள்வி குறி தான். அரசு பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை பாதியில் நிறுத்தி விடுவார்கள். அவர்களது இடை நிற்றல் குறித்து விசாரித்தால் வறுமைதான் அதற்கான காரணமாக இருக்கும். தாய், தந்தை இல்லாத குழந்தைகள் வாழ்வதற்கு வழியில்லாத சூழலில் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று விடுவார்கள்.
ஒரு மாணவருக்கு முழுமையான கல்வி அறிவு கிடைத்து விட்டால் போதும். அவர் எப்படியாவது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைந்து விடுவர். ஆனால் பெற்றோர் இல்லாத குழந்தைகளும் எக்காரணத்தை கொண்டும் கல்வியில் இடை நின்று விடக் கூடாது என்பதற்காக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பெரும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். அதன்படி அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை படிக்க கூடிய பெற்றோர் இல்லாத மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளார். இவர்களின் தேவை அறிந்து பணம் உள்ளிட்ட எந்த காரணத்தினாலும் இவர்களுடைய படிப்பு பாதியில் நின்று விடாத வகையில் அவர்களுக்கு துணையாக இருந்து வழிகாட்டுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

பெற்றோர் அன்பு கிடைக்காமல் மாணவர்கள் வழி தவறி செல்லாமல் இருக்க அவர்களை வருவாய் துறையின் நேரடி கண்காணிப்பில் இருப்பதற்கான ஏற்பாட்டை செய்து வருகிறார். மாணவர்களின் தேவைகள் அறிந்து அதற்கேற்றார் போல் உதவி செய்வதற்காக சொந்த பங்களிப்புடன், சரியான ஸ்பான்சர்ஸ் மூலம் படிப்பிற்கான ஏற்பாட்டை செய்துள்ளார். பள்ளி படிப்பு வரை மட்டுமல்ல கல்லூரி படிப்புக்கும் இதை செய்ய உள்ளார். இது வரை எடுத்துள்ள கணக்கு படி பெற்றோர் இல்லாமல் 12,353 குழந்தைகள் உள்ளனர். பெற்றோரை இழந்த சீவன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர், சில்லத்தூர் கிராமத்தை சேர்ந்த 7ம் வகுப்பு மாணவி ஆகியோரது வாழ்வு மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். அந்த குழந்தைகளுக்கு தாயாக இருந்து நிறைவான கல்வி கிடைப்பதற்கு வழி வகை செய்துள்ளார்.
பொதுவாக பெண்கள் திருமணம் ஆனதும் தங்கள் பெயருக்கு பின்னால் கணவரின் பெயரை சேர்ப்பதுதான் வழக்கம். ஆனால் நகைகளை அடகுவைத்து தன்னை படிக்க வைத்த தனது அம்மாவிற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தனது பெயருக்கு பின்னால் தனது தாயின் பெயரை சேர்த்து தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். நான் கலெக்டராக காரணமான அம்மாவுக்கு நன்றிக்கடன் செலுத்துகின்ற விதமாக அவரது பெயரை தனக்கு பின்னால் சேர்த்திருப்பதாக தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
படிப்புக்கான உதவி என்றால் முதல் ஆளாக நிற்பார். பெற்றோர் இருவரும் இல்லாத மாணவர் ஒருவர் 12ம் வகுப்பில் 532 மார்க் எடுத்திருந்தார். மேற்கொண்டு படிக்க வழியில்லாத அவரது நிலை குறித்து ஒருத்தர் கலெக்டருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பி இருந்தார். உடன் தாசில்தாரை அனுப்பி விசாரிக்க வைத்துடன் வக்கீலுக்கு படிக்க ஆசைப்பட்ட அந்த மாணவரின் கனவையும் நிறைவேற்ற கலெக்டர் நடவடிக்கை செய்துள்ளார்.
பெற்றோரை இழந்த குழந்தைகளை இறுகப்பற்றி படிப்பு எனும் படகின் மூலம் கரை சேர்க்கும் மாவட்ட கலெக்டரின் மனசு ஆயிரம் தாய்க்கு சமம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.





















