களிமண் எடுக்க தமிழக அரசு தடை - தஞ்சையில் தந்தூரி அடுப்பு தொழில் கடும் பாதிப்பு
தந்துாரி அடுப்பை முருகானந்தம் என்பவர் தான் முதன்முதலில் தயாரித்தார். தமிழகத்திலேயே தஞ்சையில் தான் தந்துாரி அடுப்பு தயாரிக்கப்படுகிறது
தஞ்சையை அடுத்த டவுன்கரம்பை, சாலைக்காரத்தெருவில் மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்கள். இவர்கள் மன்னர் காலத்தில், அவர்களுக்கும் தேவையான உணவு தயாரிக்கும் பாத்திரங்கள் செய்து தருவதற்காக இவர்களை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல தலைமுறைகளாக இதே பகுதியில் பல்வேறு வகையான மண்பாண்டங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதிக்கு இவர்கள் பெயர்களில் அழைப்பார்கள். இங்கு களிமண்ணால் அடுப்பு, பானை, பொங்கல் பானை, குத்து விளக்கு, அகல் விளக்கு, பூந்தொட்டி, கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் தொட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரித்து தஞ்சை, திருச்சி, திருவாரூர், நாகை, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர். இங்கு மண்பாண்டம் செய்யும் பழனியப்பன் மற்றும் இவரது மகன் அறிவழகன் ஆகிய இருவரும், மண்பாண்டத்தில் புதியதாக ஏதேனும் தயாரித்து விற்பனை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் களிமண்ணால் தந்துாரி அடுப்பு தயாரித்து தமிழகம் மட்டுமில்லாது வெளி நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, போடப்பட்ட தமிழக அரசின் உத்தரவால், மண் கிடைக்காததால், 5 ரூபாய்க்கு ஆயிரம் விற்பனை செய்த களிமண் தற்போது 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் இப்பகுதியில் பெரும்பாலோனோர் மாற்றுத்தொழிலுக்கும், சிலர் களிமண்ணை கடனாக வாங்கி மண்பாண்ட தொழில் செய்து வருகின்றார்கள். எனவே, தமிழக அரசு, களிமண் எடுப்பதற்கு போடப்பட்ட பல்வேறு கட்டப்பாடுகளை தளர்த்தி, மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மண்பாண்ட தொழிலாளர் அறிவழகன் கூறுகையில், மண்பாண்டத்தில் வழக்கம் போல் பானை, ஜாடி போன்றவைகள் செய்து விற்பனை செய்வதால், தனித்துவம் இல்லாமல் போய் விடுகிறது. மேலும் இங்குள்ள அனைவரும் ஒரே மாதிரியான பொருட்களை தயாரிப்பதால், மனவேதனை வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு, புதுமையான வகையில் தயாரிக்க வேண்டும் என கருதி தந்துாரி அடுப்பு தயாரிக்கப்பட்டது. தந்துாரி அடுப்பை முருகானந்தம் என்பவர் தான் முதன்முதலில் தயாரித்தார். தமிழகத்திலேயே தஞ்சையில் தான் தந்துாரி அடுப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த அடுப்பிற்கு களிமண், வண்டல் மண், நெல்லின் கருக்கா ஆகியவைகளை கொண்டு செய்யப்படுகிறது. சுமார் 3 அடி உயரத்தில் இரண்டரை அடி அகலத்தில் 3500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தந்துாரி அடுப்பில், கீழ் மட்டத்தில் விறகு கரியை வைத்து தீயிட வேண்டும். பின்னர் மேல்புறத்திலுள்ள பக்கவாட்டில் கோதுமை ரொட்டி போன்றவைகளை வைத்தால், வெந்து விடும். இதே போல் சிக்கன் போன்ற அசைவ வகைகளை கம்பியில் கோர்த்து,தீயிக்கு மேல் வைத்தால், வெந்து விடும்.தற்போது பெரும்பாலான நட்சத்திர ஹோட்டல்களில் எண்ணெண்ய் இல்லாத சுட்ட அசைவ, சைவ உணவு வகைகள் கிடைக்கும் என விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனால் தந்துாரி அடுப்பின் தேவை அதிகரித்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் தந்துாரி அடுப்பு, அந்தமான் போன்ற நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழக அரசு மண் எடுப்பதற்கு தடை விதித்துள்ளதால், களிமண் கிடைக்காமல் பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டார்கள். இப்போது இருக்கும் சொற்ப நபர்கள் மட்டும் மண்பாண்டம் தொழில் செய்து வருகின்றார்கள்.இரவு நேரத்தில் ஆட்சியாளர்களை கையில் வைத்து கொண்டு, பல நுாறு முறை லாரிகளில் அனுமதியின்றி மண்ணை எடுத்து சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்கிறார்கள். ஆனால் நாங்கள் சாக்கு மூட்டைகளில் களி மண்ணை எடுத்து வந்தால், தண்டிக்கின்றார்கள்.
எனவே, தமிழக அரசு களி மண் தடை விதித்திருப்பதை தளர்த்த வேண்டும், மண்பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கி, அட்டை உள்ளவர்கள் மட்டும் மண்ணை எடுக்கும் வகையில் உத்தரவிட வேண்டும், மண்பாண்டத்தை வெளி மாநிலத்திற்கும், நாடுகளுக்கும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில் மண்பாண்டத்தொழில் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.