தஞ்சாவூரில் திமுக முக்கிய புள்ளி வீட்டில் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் கொள்ளை
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள திமுக முக்கிய புள்ளி வீட்டில் நகை, வெள்ளிப்பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் தி.மு.க விவசாய அணி மாநில செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் வீடு தஞ்சாவூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள சேகரன் நகரில் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த 28ம் தேதி இரவு ஏ.கே.எஸ். விஜயனின் மனைவி ஜோதிமணி (54) தனது மகளை அழைத்துக் கொண்டு நாகையில் உள்ள வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். இன்று 1ம் தேதி காலை 8.30 அளவில் ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் தஞ்சைக்கு உள்ள வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. அதில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கடந்த 2 நாட்களாக வீடு பூட்டப்பட்டு இருந்ததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடன் இதுகுறித்து ஜோதிமணி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசிற்கு தகவல் தெரிவித்தார். உடன் சம்பவ இடத்திற்கு தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மேலும் சம்பவ இடத்தை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன நகை, வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் எவ்வளவு என்பது குறித்து இதுவரை தகவல்கள் தெரியவில்லை.




















