சுக்கிர தோஷம் நிவர்த்தியாகணுமா? கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு வாங்க...
சுக்கிர தோஷம் நீங்க தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
தஞ்சாவூர்: சுக்கிர தோஷம் நீங்க தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் அக்னீஸ்வரர் ோயிலுக்கு சென்று வழிபடுங்கள். தோஷம் நீங்கி வாழ்வில் வளம் பெறுவீர்கள். இது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
பிரம்மதேவன் வழிபட்ட தலம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் ஆடுதுறையில் இருந்து சூரியனார்கோயிலுக்கு அருகிலும் அமைந்துள்ளது கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருத்தலம். பாடல் பெற்ற திருத்தலங்களில் இது 36வது திருத்தலம் என்று போற்றப்படுகிறது. புனிதத் தலங்களில் மிக முக்கியமாகக் கருதப்படும் கோயில்களில் இதுவும் ஒன்று. பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து தரிசனம் செய்கிறார்கள். கஞ்சம் என்றால் தாமரையில் இருப்பவன் என்று பொருள். அதாவது பிரம்ம தேவன் வழிபட்ட தலமாதலால் இத்தலத்திற்கு கஞ்சனூர் என்று பெயர் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கம்சனூராக இருந்து கஞ்சனூராக மாறியதாம்
புராண - புராதனப் பெருமைகள் கொண்ட திருத்தலம் இது. கஞ்சனூர் என்றும் கஞ்சனூர் சதுர்வேதி மங்கலம், நல்லாற்றுக் கஞ்சனூர், நாட்டுக் கஞ்சனூர் என்றெல்லாம் புராணமும் சரித்திரமும் சொல்லுகிற திருத்தலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். புலாசவனம், பராசரபுரம், கம்ஸபுரம், அக்னிபுரம், மோட்சபுரம் என்றெல்லாம் புராணம் இந்தத் தலத்தை விவரித்துள்ளது. கம்சன் வழிபட்ட திருத்தலம் கம்சனூர் எனப்பட்டு பின்னாளில் கஞ்சனூர் என மருவியதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்.
மோட்சத்தை அடைய அருள்பாலிக்கும் தலம்
இத்திருத்தலத்தின் இறைவன் ஸ்ரீஅக்னீஸ்வரர். முக்தி தரும் தலம் என்றும் மோட்சத்தை அடைய அருள்பாலிக்கும் தலம் என்றும் போற்றப்படுகிறது. இந்தத் தலமானது சுக்கிர திருத்தலம் எனப்படுகிறது. தேவாரம் பாடிய திருத்தலம் எனும் பெருமையும் கஞ்சனூருக்கு உண்டு. நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்கு உரிய தலம். இந்த தலத்து இறைவனை திருநாவுக்கரசரின் தேவாரப் பாடலைப் பாடி மனதார வேண்டிக்கொண்டால், மங்கல காரியங்கள் நடைபெறும். மங்காத செல்வம் கிடைக்கப் பெறலாம்.
சோமாஸ்கந்த தரிசனம் என்று அழைக்கப்படுகிறது
சிவபெருமான் அருகே அம்பிகை கற்பக நாயகி திருநாமத்துடன் அருள்புரிகிறார். சுவாமியும் அம்பாளும் கிழக்கு நோக்கி ஒரே திசையில் காட்சி தருகிறார்கள். இவ்விருவருக்கும் இடையில் சுப்பிரமணியர் சன்னதி அமைந்துள்ளது. இத்தகைய காட்சி சோமாஸ்கந்த தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
ஹரதத்த சிவாச்சாரியார் தீயில் பழுக்கக் காய்ச்சிய பீடத்தின் மீது அமர்ந்து சைவ சமயத்தின் மேன்மையை உலகிற்கு உணர்த்திய தலம் இந்த கஞ்சனூர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மானக்கஞ்சாற நாயனார் முக்தி அடைந்த திருத்தலம் இது. சிவனை வருடம் தொடங்கும் பொழுது வந்து வழிபடுவது சிறப்பான ஒன்றாக இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். இந்த கோயில் வெள்ளி அதாவது சுக்கிரன் கிரகத்தை வழிபடுவதற்கான முக்கிய தலமாக விளங்குகிறது. காவிரி டெல்டா மாகாணத்தில் புகழ்பெற்ற 9 நவக்கிரக கோயில்களில் இதுவும் ஒன்று. பராசரருக்கு சித்தப்பிரமை நீங்கியது, பிரம்மனுக்குத் திருமண காட்சி கொடுத்தது, அக்னி பகவானுக்கு உண்டான சோகை நோயைத் தீர்த்தது,
சுக்கிர தோஷம் இங்கு வழிபடுவது சிறப்பாகும்
சந்திரனின் சாபம் தீர்த்தது, கம்சன் என்னும் மன்னனின் உடற்பிணி நீங்கியது, கலிக்காமருக்குத் திருமணம் நடந்தது, மானக்கஞ்சாறர் அவதரித்தது எனப் பல சிறப்புகளை உடையது இத்தலம். ஒரு முறை சுக்கிராச்சாரியாரால் விஷ்ணு பகவானுக்குச் சுக்கிர தோஷம் ஏற்பட்டு விட்டது அந்த தோஷத்தை நீக்க விஷ்ணு ஹரதத்தர் என்ற திருநாமத்துடன் இந்த கஞ்சனூரில் வந்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார் என்கிறது புராணம்.
சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் உள்ள சுக்கிரனுக்கும் அருகில் உள்ள ஐம்பொன்னால் ஆன சிவபெருமானுக்கும் வழிபாடு செய்வது சிறப்பாகும்.