ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள தஞ்சையின் பெருமைகள்; நீர்வழிபாதைகளை மீட்டெடுக்க மக்கள் வலியுறுத்தல்
தஞ்சாவூரின் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த தேர்நிலைகளை மீட்டெடுத்து புதுப்பித்தது போல் இன்னும் பல ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள தஞ்சையின் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும்.
தஞ்சாவூர்: தஞ்சாவூரின் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த தேர்நிலைகளை மீட்டெடுத்து புதுப்பித்தது போல் இன்னும் பல ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள தஞ்சையின் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரலாற்று சிறப்பும், பெருமையும் வாய்ந்த நகரம் தஞ்சாவூர். உலகப் பெருமை வாய்ந்த பெரிய கோயிலும், இதை சார்ந்த பல்வேறு பெருமைகளும் ஏராளம். தஞ்சை மாநகரம் என்றாலே கோயில்கள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.
இக்கோயில்களும் அதன் தேரோட்டமும் ஆன்மீகத்தின் கல்வெட்டுகளில் அழியாத இடத்தை பிடித்துள்ளன. இந்த தேரோட்டத்தோடு தொடர்புடையவைதான் தேர் நிலைகள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் மூலவர் அருள்பாலிப்பது போல், தன்னை நேரில் வந்து வழிபட முடியாத பக்தர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று உற்சவ சுவாமிகள் காட்சி கொடுப்பது தான் வீதியுலாவும், தேரோட்டமும்.
தேர் எந்த அளவிற்கு உயரமாக கட்டப்படுகிறதோ அதன் பீடம் வரை, அதன் அருகில் தேர் நிலைகள் கட்டி வைக்கப்பட்டு அதில் உற்சவ சுவாமிகள் அமர வைத்து தேரோட்ட காலத்தில் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த தேர்நிலைகள் காலப்போக்கில் பேச்சு வழக்கில் தேர்முட்டிகள் என்று அழைக்கப்பட்டன. தற்போது அந்த பெயரே நிலைத்து நிற்கிறது.
அதன்படி, தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளான தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதிகளில் தேர்நிலைகள் எனப்படும் தேர்முட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கோயிலுக்கும் இந்த தேர்முட்டிகள் மராட்டிய மன்னர்கள் காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவைகளால் கட்டப்பட்டு, கோபுரங்களுடன் நான்கு பக்கம் தூண்களும், ஏறி இறங்க படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் இந்த தேர்நிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நான்குபுறமும் நந்தியும், அழகியல் நிறைந்த சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதன் வடிவமைப்பே மனதை கொள்ளைக் கொள்ளும். இந்த தேர்நிலைகள் தமிழர்களின் சிற்ப வேலைப்பாட்டை வெளிக் கொணரும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டு இருந்தன. தஞ்சாவூர் மேலவீதியில் கொங்கேனஸ்வரர் கோயில், பிரதாபவீர அனுமன் கோயில், விஜயராமர் கோயில், தெற்கு வீதியில் சங்கரநாராயணன் கோயில் ஆகியவற்றுக்கு இப்படி தேர்நிலைகள் உள்ளது.
இந்த தேர்நிலைகள் காலப்போக்கில் தனியாரால் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. ஆக்கிரமிப்பாளர்கள் தேர்நிலைகளை வீடுகளாக மாற்றியதுதான் பெரிய வேதனை. அருமையான வேலைப்பாடுகளும், அற்புதமான கட்டட அமைப்பும் கொண்ட இந்த நிலைகளை வீடுகளை கட்டி குடியேறினர். இந்த தேர் நிலைகளில் இருந்த சுதை சிற்பங்களும் உடைந்து சேதமானது. சில தேர்நிலைகள் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் இருந்தது. நம் முன்னோர்களின் அழியாத பெருமைகள் ஆக்கிரமிப்பில் சிக்கியது. கட்டிட கலைக்கும், சிலைகள் வேலைபாடுகளுக்கும் அற்புதமான எடுக்காட்டாக இருந்த இந்த தேர்நிலைகள் நிலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது.
இந்நிலையில்தான் தஞ்சாவூரில் அழிவின் விழிம்பில் இருந்த இந்த தேர்நிலைகளை மீட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் மேலவீதி, தெற்கு வீதியில் உள்ள நான்கு தேர்நிலைகளும் சீரமைக்கப்பட்டது. பழைய ஆவணங்களை கொண்டு தேர்நிலைகளை கண்டறியும் பணிகளில் அதிகாரிகள் இறங்கினர். தொடர்ந்து தேர்நிலைகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தொல்பொருள் துறை அனுமதியோடு பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு இப்போது கம்பீரமாக காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த தஞ்சை பெரியகோவில் சித்திரை தேரோடத்தின் போது சுவாமி இந்த தேர்நிலைகளில் நிலை கொண்டது பக்தர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அதிலும் பிரதாபவீர ஹனுமன் கோயில், விஜயராமர் கோயில் தேர்நிலைகள் பழமை மாறாமல் அப்படியே மீட்டெடுக்கப்பட்டு புதுப்பொலிவுடன் உள்ளது. பழமைமாறாத இந்த தேர்நிலைகளை காணும் பக்தர்கள் தங்களை மறந்து லயித்து ரசிக்கின்றனர்.
மராட்டிய மன்னர் காலத்தில் தஞ்சாவூரில் தேரோடும் வீதிகளில் தேர் நிலைகள் கட்டப்பட்டுள்ளது. முன்பு அந்தந்த கோயிலுக்கு தேர் இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில் தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறும் போது, இந்த தேர்நிலைகளில் அந்தந்த கோயில்களின் சுவாமிகள் தேர் நிலைகளில் அமரவைத்து பக்தர்களுக்கு அருள்பாலித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெரிய கோயில் தேரோட்டம் நூறாண்டுகளுக்கு பின்னர் நடைபெற்றது. அப்போதும் கூட இந்த தேர்நிலைகள் பயன்படுத்த முடியவில்லை. ஆக்கிரமிப்புகளின் பிடியில் அந்த தேர்நிலைகள் இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டு இந்த தேர்நிலைகள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடமும், வரலாற்று ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எத்தனையோ ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் கம்பீரமாக இந்த தேர்நிலைகள் காட்சியளிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல் தஞ்சையின் பெருமை இன்னும் நிறைய உள்ளது. அதுவும் ஆக்கிரமிப்பால் சிக்கியுள்ளது. அதையும் மீட்டெடுத்தால் இன்னும் சிறப்பு என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.