தஞ்சாவூர் நிப்டெம்-ல் உணவு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்தரங்கம் தொடக்கம்
31வது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கம் தொடங்கி தொடர்ந்து 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் தஞ்சாவூரில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) 31வது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கம் நாளை 20ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.
இது குறித்து நிறுவன இயக்குநர் வி. பழனிமுத்து நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்ளேனம் சார்பில் 31வது இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்தரங்கம் தொடங்கி தொடர்ந்து 20ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கம் தஞ்சாவூரில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

இதில் உலகம் முழுவதுமிருந்து 150-க்கும் அதிகமான நிறுவனங்கள், தொழில் துறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலிருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், உணவு துறையைச் சார்ந்த நம் நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 80-க்கும் அதிகமான பேச்சாளர்கள் பங்கேற்று உணவுத் துறையிலுள்ள முன்னேற்றங்கள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து பேசவுள்ளனர்.
உணவு பதப்படுத்தும் தொழில்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அரசு அமைப்புகள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் சார்பில் அதிநவீன தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், உபகரணங்களின் கண்காட்சி அமைக்கப்படவுள்ளன. நிப்டெமில் இதுவரை உணவுத் துறையைச் சார்ந்த 135 புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதேபோல, இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்ளேனத்தினர் ஏறத்தாழ 440 புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பயன்பாட்டுக் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது சம்மேளனத்தின் தலைவர் ஆஷிதோஷ் ஏ. இனாம்தார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்தரங்கம் தொடக்கம்
தஞ்சாவூர் தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு, மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்ளேனம் சார்பில் நேற்று தொடங்கிய கருத்தரங்கு தொடக்க விழாவில் கர்நாடக மாநிலம் குடகு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அசோக் எஸ். அலூர் பேசியதாவது:
உணவுத் துறையில் ஊட்டச்சத்து குறைபாடு, பசி, உடல் பருமன் போன்ற சவால்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உணவு பாதுகாப்பு உறுதி மற்றும் தரநிலைகளைப் பேணுதல் நாட்டின் முக்கிய சவால்களாக இருக்கின்றன. வெறும் கலோரி கணக்கீட்டில் மட்டுமே சுருங்காமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சுயவிவரத்தை எடுத்துரைக்கும் வகையில் நவீன கருவிகள் உருவாக்கப்பட வேண்டும்.
உணவியல், உணவு வளங்களின் மறுசுழற்சி மற்றும் உள்ளூர் உணவுகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும், ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளை ஊக்குவிப்பதற்கு உணர்வு வடிவமைப்பை மையமாகக் கொண்ட காஸ்ட்ரோனாமிக் பொறியியல் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். தொழில்முனைவோர் முயற்சிகள் வெறும் வணிக வளர்ச்சிக்காக அல்லாமல், சமூக நலனையும், எதிர்கால தலைமுறைகளின் நலனையும் பாதுகாக்கும் தீர்வுகளை உருவாக்குவது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடக்க விழாவுக்கு இந்திய உணவு விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் சம்மேளனத் தலைவர் ஆஷிதோஷ் ஏ. இனாம்தார் தலைமை வகித்தார். இக்கருத்தரங்கத்தை அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கிரிதர் பர்வதம் தொடங்கி வைத்தார். கட்டுரைத் தொகுப்பை இந்திய நச்சுவியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் பாஸ்கர் நாராயண் வெளியிட்டார்.
தொடக்க அமர்வை தேசிய பல்துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநர் சி. அனந்தராமகிருஷ்ணன், ஆராய்ச்சி தொகுப்புகளின் சுவரொட்டி அமர்வை தஞ்சாவூர் நிப்டெம் இயக்குநர் வி. பழனிமுத்து தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, சம்மேளனத்தின் கௌரவ செயலர் பசவராஜ் முந்தலாமணி வரவேற்றார். தஞ்சாவூர் கிளைத் தலைவர் வி.ஆர். சினிஜா நன்றி கூறினார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கம் நாளை சனிக்கிழமை நிறைவடைகிறது.





















