புதிதாக 2.8 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை: உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
தற்போது புதியதாக 2.8 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரிண்டிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்: புதிதாக 2.8 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்பு துறை தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் முன்னிலையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல்லின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அங்கு பணிபுரியும் பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முழுவதும் 380 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடோன்கள் மூலம் 20.44 மெட்ரிக் டன் அளவு சேமித்து வைக்க முடியும். கூட்டுறவுத்துறை மூலம் 2023-24-ம் ஆண்டில் ரூ.15542 கோடி 18 .36 லட்சம் விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.16500 கோடி கடன் வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 36954 ரேஷன் கடைகள் உள்ளன. இதில் 29000 கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்குகிறது. 7954 கடைகள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகிறது. இந்த கடைகளை பல்வேறு திட்டங்களின் கீழ் சொந்த கட்டிடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2009 புதிய ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் திறந்தவெளி கிடங்குகளை மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளாக மாற்றப்பட்ட பிறகு மழையில் நெல் மூட்டைகள் நனைவது முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. கூட்டுறவு துறை மூலம் கடந்த ஆண்டு 18.35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 15 ஆயிரத்து 545 கோடி வழங்கப்பட்டது.
இதேபோல நடப்பாண்டு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ. 16 ஆயிரத்து 500 கோடியும், கால்நடைக் கடன் ரூ. 2 ஆயிரத்து 500 கோடியும், மத்திய கால கடன் ரூ.1,500 கோடியும் என மொத்தம் ஏறத்தாழ ரூ. 20 ஆயிரம் கோடி கடன் வழங்க தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் 18.64 லட்சம் கார்டுகள் அந்தியோதயா திட்ட கார்டுகள் ஆகும் . 1.14 கோடி தேசிய உணவு பாதுகாப்பு கார்டுகள் உள்ளன. தேர்தல் நேரத்தில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்காமல் இருந்தன. தற்போது புதியதாக 2.8 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பிரிண்டிங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், பருப்புக்கு ஒப்பந்தம் கோருவதில் தேர்தல் நேரத்தில் சவாலாக இருந்த நிலையில், தற்போது கோரப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் சுணக்கம் இருந்தாலும், ஜூலை மாத ஒதுக்கீடு முழுவதும் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகிற மாதத்துக்கு சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.