நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு வழங்காத அதிகாரிகளுக்கு ரூ.7 லட்சம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதி விலைக்கு நெல் மூட்டைகளை விற்ற தொகை போக மீதி தொகையை கொடுக்க எதிர் தரப்பினர் கடமைப்பட்டவர்கள் இழப்பிற்கான காப்பீடுதொகையை வழங்காதது சேவைகுறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது.
கஜா புயலால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு இழப்பீடு வழங்காத ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுக்கு ரூ. 7 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த விஜயகுமாரி, சரவணன், முருகேசன், ரமேஷ் ஆகியோர் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தங்களது 1020 நெல் மூட்டைகளை கடந்த 2018 ஆம் ஆண்டு ஈடாக வைத்து தங்களது நெல் முட்டையின் மதிப்பில் இருந்து 50 சதவீத தொகையினை கடனாக பெற்றுள்ளனர். இதனையடுத்து கடந்த 16.11.2018 அன்று கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மேற்கூரை பெயர்ந்து நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள் நால்வரும் வேறு வழியின்றி வெளி மார்க்கெட்டில் தங்களது நெல் மூட்டைகளை பாதி விலைக்கு விற்று உள்ளனர். மேலும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கான வாடகை தொகை மற்றும் தங்கள் ஈடாக கடன் பெற்ற தொகைக்கான வட்டி ஆகியவற்றை விவசாயிகள் முறையாக கட்டி உள்ளனர். இருப்பினும் திருத்துறைப்பூண்டி ஒழுங்குமுறை விற்பனை அதிகாரிகள் நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து விவசாயிகளுக்கு சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கான உரிய காப்பீடு தொகையை பெற்று தரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, விவசாயிகள் நால்வரும் இதுகுறித்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர்கள் பாக்கியலட்சுமி லட்சுமணன் அடங்கிய அமர்வு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாதி விலைக்கு நெல் மூட்டைகளை விற்ற தொகை போக மீதி தொகையை கொடுக்க எதிர் தரப்பினர் கடமைப்பட்டவர்கள் என்றும் இழப்பிற்கான காப்பீடு தொகையை வழங்காதது சேவை குறைபாடு என இந்த ஆணையம் கருதுகிறது. எனவே நெல்மூட்டைகளுக்கான மதிப்பின் பாதி தொகையான 4 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயும் நான்கு விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் பொருள் நஷ்டத்திற்கு இழப்பீடாக தலா 50,000 ரூபாயும், மேலும் நால்வருக்கும் வழக்கு செலவு தொகையாக 40 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை கண்காணிப்பாளர் ஒழுகுமுறை விற்பனை கூடம் திருத்துறைப்பூண்டி, செயலாளர் திருவாரூர் விற்பனை குழு, கிளை மேலாளர் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி கும்பகோணம் ஆகிய மூவரும் சேர்ந்தோ அல்லது தனித்தோ வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயிர் காப்பீடு மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டுமின்றி பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை நாடலாம் என்ற நம்பிக்கை எழுந்திருப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய தொலைக்காட்சி வாங்கிய இரண்டு நாட்களில் தொலைக்காட்சி பழுதடைந்துள்ளது இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் வாடிக்கையாளரை அலைக்கழித்துள்ளனர். இந்த வழக்கு குறைதீர் ஆணையத்தில் வந்த பொழுது பாதிக்கப்பட்ட நபருக்கு புதிய தொலைக்காட்சி வழங்க வேண்டும். மேலும் அவர் மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதேபோன்று பல்வேறு தீர்ப்புகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சாதகமாக வருவதால் அதிகளவில் நுகர்வோர் குறைதீர ஆணையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கஜா புயலால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏழு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைவு நீதிமன்றம் உத்தரவிட்டது விவசாயிகளிடையே முடிந்த மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.