களைப்பு நீங்கவும், கடவுளை வேண்டியும் நாட்டுப்புற பாடல்களை பாடி சம்பா நாற்று நட்ட பெண் விவசாய தொழிலாளர்கள்
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்யதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் வருண பகவானை நம்பி சம்பா நடவு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இதை ஒட்டி சம்பா நடவுப்பணியின் போது பெண் தொழிலாளர்கள் களைப்பு தெரியாமல் இருக்கவும், கடவுளை வேண்டியும் நாட்டுப்புறப்பாடல்களை பாடினர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். கோடையிலும் நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், கரும்பு, எள், பயறு போன்றவையும் சாகுபடி செய்யப்படுகிறது.
இதற்காக மேட்டூர் அணை ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் இருந்து அணை திறக்கப்பட்டால் குறுவை பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். நடப்பாண்டு காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து 16-ம் தேதி கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்காக தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது.
இந்த தண்ணீரை கொண்டு விவசாயிகள் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை மேற்கொண்டனர். 5.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நிலையில், போதிய அளவு தண்ணீர் இல்லாததால் 3 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிர்கள் பாதிக்கப்பட்டன. எஞ்சிய நெற்பயிர்கள் முற்றிய நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்யதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் சாலைகளில் விவசாயிகள் காய வைத்த நெல்லும் நனைந்தது. இதனாலும் விவசாயிகள் வேதனையடைந்தனர். தொடர்ந்து நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தின் அளவு குறித்து கெடுபிடி செய்யாமல் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையில் சம்பா பருவத்திற்காக காவிரியில் தண்ணீர் திறக்க கோரி தொடர் போராட்டங்களும் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் மின் மோட்டார் வைத்துள்ள விவசாயிகள் சம்பா நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரத்தநாடு அருகே பாச்சூர் கிராமத்தில் நடவு பணியில் ஈடுபட்ட பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்கவும், கடவுளை வேண்டியும் முருகன் பக்தி பாடல்கள் மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடி நடவு பணியை மேற்கொண்டனர். காலை முதல் மதியம் வரை இடைவெளியின்றி நாற்று நடுவதால் ஏற்படும் சோர்வை போக்கும் விதமாக பெண் தொழிலாளர்கள் நாட்டுப்புறப் பாடல்களை ராகம் போட்டு பாடினர். இதை அவ்வழியே சென்றவர் ரசித்துக் கொண்டே சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவிரியில் தண்ணீர் திறக்க ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்து வந்தாலும் சம்பா பயிரை காக்க வருண பகவான் நிச்சம் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கையில் டெல்டா விவசாயிகள் மழையை நம்பி களத்தில் இறங்கி உள்ளனர். விவசாயிகளின் நம்பிக்கைக்கு முக்கிய காரணம் வரும் 27-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது தான்.