(Source: ECI/ABP News/ABP Majha)
சாலை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினாலே போதும்... விளை நிலங்களை அழிக்க கூடாது
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வயலில் கருப்புக் கொடியுடன் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றில் போக்குவரத்து நெரிசல் இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். திருவையாறு கடைவீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் பலருக்கும் பல்வேறு வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுக் கொண்டே வந்தது.
பொதுமக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து புறவழிச்சாலை அமைக்க திருவையாறு, கண்டியூர், மணக்கரம்பை , கீழ திருப்பந்துருத்தி, கல்யாணபுரம் உள்ளிட்ட ஊர்களில் 100 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளுக்கான அளவீடும் எடுக்கும் பணிகளும் நடந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
மேலும், மூன்று போகம் விளையும் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்நிலையில் காட்டுக்கோட்டையில் நடவு செய்யப்பட்டிருந்த வயலில், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் எனக் கூறி நெடுஞ்சாலை துறையினர் பயிர்களை அழிக்க முயன்றனர். இதையறிந்த விவசாயிகள், பெண்கள் பொக்லைன் இயந்திரத்தை மறித்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த திருவையாறு தாசில்தார் பழனியப்பன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை போராட்டத்ததை விவசாயிகள் கைவிட்டனர். இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், திருவையாறு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை செய்யாமல், விளைநிலங்கள் வழியாக புறவழிச்சாலை அமைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், முறையான அளவீடு செய்யாமலும், உரிய இழப்பீடும் அறிவிக்காமல் பணிகளில் அரசு ஈடுபடுவதை நீதிமன்றம் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.
முன்னதாக கிராம சபை கூட்டத்தின் போதே விவசாய நிலங்களை அழித்து புறவழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம மக்கள் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழ திருப்பந்துருத்தி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் காயத்ரி ரமேஷ் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள்,விவசாயிகள் சிலர் புறவழிச்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ச் அணிந்தும், சங்கு ஊதியபடி கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
மேலும், பெரம்பலுார் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில், அரசூர், காட்டுக்கோட்டை, கீழ திருப்பந்துருத்தி, நடுபடுகை, தில்லைஸ்தானம், திருவையாறு, அந்தணர் குறிச்சி வழியாக விளாங்குடி சாலை இணைப்பு திட்டமாக சுமார் 8 கிலோமீட்டர் வரையில், நிலங்களை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த ஆண்டு மத்திய அரசு, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
புறவழிச் சாலை அமைக்கப்பட்டால், உளுந்து, தென்னை, வாழை உள்ளிட்ட விளை நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, கண்டியூர், நடுக்கடை, திருவையாறு ஆகிய பகுதிகளில் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றினால், போக்குவரத்து பாதிக்காது, விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தினால், வாழ்வாதாரம் கேள்வி குறியாகும் என மூன்றாவது முறையாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.