நம்பிக்கை அதுதானே வாழ்க்கை... வருணபகவானை எதிர்பார்த்து சம்பா சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் நிலங்களை தயார் பணியில் மழையை நம்பி விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடிக்கான பணிகளில் இறங்கி உள்ளனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சம்பா சாகுபடிக்காக விவசாயிகள் நிலங்களை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழையை நம்பி விவசாயிகள் நம்பிக்கையுடன் சாகுபடிக்கான பணிகளில் இறங்கி உள்ளனர்.
டெல்டா பகுதியில் நெல் சாகுபடியே பிரதானம்
டெல்டா பகுதிகளில் அதிகளவில் நெல் சாகுபடிதான் மேற்கொள்ளப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் வந்து விட்டால் குறுவை, சம்பா, தாளடி என்று விவசாயிகள் வெகு மும்முரம் அடைந்து விடுவர். ஒரு சில பகுதிகளில் கரும்பு, சோளம் போன்றவை சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் நெல்தான் பிரதான பயிராக உள்ளது.
ஆண்டுதோறும் குறுவைப் பருவத்தில் நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதி திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. இதனால் வடிமுனைக் குழாய் வசதியுள்ள இடங்களில் மட்டும் ஏறத்தாழ 50 சதவீத அளவுக்கே குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
வேளாண் துறையினர் தகவல்
இந்நிலையில், கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், டெல்டா பாசனத்துக்காக ஜூலை 28ம் தேதி அணை திறக்கப்பட்டது. சம்பா பருவத்தில் டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக 14 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடிநெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். தற்போது மேட்டூர் அணை நிறைந்து இருப்பதால் வழக்கத்தை விட சுமார் ஒரு லட்சம் ஏக்கர் அதிகமாக சாகுபடி மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது என வேளாண்மைத் துறையினர் தகவல் தெரிவித்தனர்.
சம்பா நெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணி
டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கான ஆயத்தப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். அவ்வப்போது பெய்யும் மழை மற்றும் ஆறுகளில் வரும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு நிலத்தை உழுது, நடவுக்குத் தயார்படுத்தும் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். சம்பா பருவத்தைப் பொறுத்தவரை நீண்ட மற்றும் மத்திய கால நெல் ரகங்களான சிஆர் 1009, ஆடுதுறை 51, ஆடுதுறை 39 உள்ளிட்டவைகளை விவசாயிகள் தேர்வு செய்து உள்ளனர்.
3. 45 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக இலக்கு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் குறுவை அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 3. 45 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடிக்காக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பா சாகுபடிக்கு தேவையான விதை நெல்கள், உரம் ஆகியவை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தேவையான அளவிற்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
50% மானியத்தில் விதை நெல்கள் விற்பனை
வேளாண் விரிவாக்க மையங்களில் 50% மானியத்தில் விதை நெல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் அரசு சார்பில் மானியத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது. இருப்பினும் மின் மோட்டார் வசதி உள்ள விவசாயிகள் தற்போது சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். கடந்த சில தினங்களாக நிலவிய கடும் வெப்பத்தால் சாகுபடி நிலங்கள் இறுகி போய் உள்ளது.
எனவே நிலங்களை இலகுவாக்க ஏற்ற வகையில் தற்போது மின் மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து வயல்களை தயார் செய்து வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் சம்பா சாகுபடிக்காக வயல்களில் தண்ணீரை இறைத்து உழவு பணிகளுக்காக விவசாய நிலங்களை விவசாயிகள் தயார் செய்து வருகின்றனர். சில பகுதிகளில் கை டிராக்டர் மூலம் வயல்களை உழுது தயார்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.