மதிமயக்கும் குரலில் சினிமா பாடலை பாடி மக்களை கவர்ந்த டிஎஸ்பி - மயிலாடுதுறை சுவாரஸ்யம்
மயிலாடுதுறை அருகே காவல்துறை பொதுமக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக மதிமயக்கும் குரலில் சினிமா பாடலை பாடி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி டிஎஸ்பியின் செயல் பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
காவல்துறை உங்கள் நண்பன் என்ற சொல்லாடலுக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடிக்கும் காவல்துறையில் பல அதிகாரிகள் இருக்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுவதும் நாம் அறிந்த ஒன்று. பெரும்பாலான காவலர்கள் கடுகடுவென முகத்துடன் பொதுமக்களை அணுகுகின்றன. இதில் விதிவிலக்காக ஒரு சில காவலர்கள் இன்முகத்துடன் பொதுமக்களுடன் உறவாடுகின்றன. இதுபோன்ற இணக்கமான உறவே குற்றவாளிகள் அற்ற சமூகத்தை உருவாக்க வழிவகை செய்யும் என பலரது கருத்தும் கூட. அதற்கு எடுத்துக்காட்டு சம்பவம் தான் மயிலாடுதுறையில் நடந்தேறியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி ஊராட்சி திருவேள்விக்குடி அண்ணா திருமண மண்டபத்தில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பாக போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் நீலகண்டன் கலந்து கொண்டார். கலந்து கொண்டு மகளிர் மற்றும் கிராம பொதுமக்களுக்கு மது, கஞ்சா, உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு குறித்து பேசினார்.
அப்போது அவர் "பாடும்போது ஒரு தென்றல் காற்று" என்ற சினிமா பாடலை, மதிமயக்கும் ராகத்தில் பாவனைகளுடன் பாடி காவல்துறையினர் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் அச்ச உணர்வை போக்கி நல்லுறவை ஏற்படுத்தினார். தொடர்ந்து செல்போன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அதனை காவல்துறை மூலம் எவ்வாறு சரி செய்வது இதுபோன்ற பிரச்னைகளுக்கு காவல்துறையை அணுகி உரிய தீர்வுகாண வேண்டும், கள்ளசாராயம் கஞ்சா உள்ளிட்ட போதைப்போருள் பயன்பாடு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும், கிராமப்புறங்களில் நிலவும் சாதிய பாகுபாடுகளை களைய வேண்டும், மதுவுக்கு அடிமையாகி மனிதன் தொழில் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டு குடும்பம் கெட்டுபோகும் என்றும் இதனை தடுத்து குடும்பத்தினர் மதுவுக்கு அடிமையானவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாடல் பாடி அசத்திய டிஎஸ்பி pic.twitter.com/wrPdhCxfvm
— JAGANNATHAN (@Jaganathan_JPM) August 23, 2023">
இனிய குரலில் சினிமா பாடலை பாடி அசத்தி காவல் துணை கண்காணிப்பாளர் நீலகண்டனின் போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு அனைவரின் மனதிலும் பதிந்து, பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. இதில் கடலங்குடி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஜீவானந்தம், உள்ளிட்ட கிராம மக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.