தஞ்சாவூர் மாவட்டத்தில் களைக்கட்டியது தீபாவளி... காலை முதல் வெடிகள் வெடித்து மக்கள் உற்சாகம்
தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் தீபாவளியை வெடிகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இனிப்பு, கார வகைகளை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை முதல் மக்கள் தீபாவளியை வெடிகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் இனிப்பு, கார வகைகளை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
இந்துக்களின் பண்டிககளில் தீபாவளி முக்கியமான பண்டிகை ஆகும். தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். தீபாவளி பண்டிகை அன்று அதிகாலை எழுந்து குளித்து புத்தாடை அணிந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பலகாரங்களை கொடுத்து மகிழ்வர்.
அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே கடைவீதிகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி இருந்தது. புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் கிராமங்களில் இருந்தும் நகரங்களை நோக்கி படையெடுத்தனர்.
அதன்படி தஞ்சை மாநகரிலும் தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி நிறுவனங்கள், ஸ்வீட் ஸ்டால்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் ஏராளமான வியாபாரிகள் ஆடைகள் விற்பனை கடைகளை அமைத்து இருந்தனர். தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள் எடுக்க நேற்று காலை முதல் தஞ்சாவூருக்கு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் குவிந்தனர். இதனால் தஞ்சை காந்திஜி சாலையே குலுங்கியது. எந்த பக்கம் பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே தெரிந்தது.
இதனால் காந்திஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. வழக்கமாக காந்திஜி சாலையில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதே போன்று பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து காந்திஜி சாலையின் மையப்பகுதியிலும் ஏராளமான தரைக்கடை வியாபாரிகள் தற்காலிக கடைகளை அமைத்து புத்தாடைகள் வாங்குவதற்காகவும், இதர பொருட்கள் வாங்குவதற்காகவும் ஏராளமானோர் குவிந்தனர்.
பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் அந்த பகுதியில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் போலீசார் வாகனங்களிலும் ரோந்து வந்த வண்ணமும் இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை தஞ்சையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தஞ்சை காந்திஜி சாலை ஆற்றுப்பாலம் பகுதியில் நூற்றுக்கணக்கான டூவிலர்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து இருந்தது. தொடர்ந்து இன்று அதிகாலை முதல் தஞ்சை மாநகர் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் குளித்து, வீட்டில் சுவாமி கும்பிட்டு புத்தாடைகள் அணிந்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.;
வயது வித்தியாசம் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெடிகளை வெடித்து மகிழ்ந்தனர். காலை 8 மணி வரை வெடிகள் வெடிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. நீதிமன்ற உத்தரவின்படி வெடிகள் வெடிக்க அறிவிக்கப்பட்டு இருந்த நேரத்தையும் தாண்டி வெடிகள் வெடிக்கப்பட்டன. பின்னர் இனிப்புகள் சாப்பிட்டு தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்னக ரயில்வே பாதுகாப்பு பிரிவு சார்பில் ரயில் நிலையங்களில் பாதுகாப்பான பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினர். அதன்படி தஞ்சை ரயில் நிலையத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை பயணிகள் ரயிலில் எடுத்துச் செல்லக் கூடாது. அபாயகரமான பொருட்கள், பட்டாசுகள் போன்றவற்றை எடுத்து செல்வதை தவிர்த்திட வலியுறுத்தி கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து இருப்பு பாதை காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து பாதுகாப்பான பயணம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.