"ஊட்டச்சத்தை உறுதி செய்" - தஞ்சாவூரில் 30 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 1777 தாய்மார்களில் முதல்கட்டமாக இன்று 30 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" இரண்டாம் கட்டம் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்கா அங்கன்வாடி மையத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அரியலூர் மாவட்டத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் "ஊட்டச்சத்தை உறுதி செய்" இரண்டாம் கட்டம் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி சிவகங்கை பூங்கா வளாகத்தில் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறை குழந்தைகள் மையத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் 30 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் முன்னோடித் திட்டமான "ஊட்டச்சத்தை உறுதி செய்" திட்டம் தமிழக முதல்வரால் முதற்கட்டமாக 2022ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். பிறந்தது முதல் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலன் பேணிணால் மட்டுமே குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும்.
தற்போது 76.705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலுட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல் குழந்தைகளின் நிலையை தொடர்ந்து (TNICDS) App ன் மூலம் கண்காணிக்கும் ஏ ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் 2-ம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களிலும் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைகளின் 1777 பாலூட்டும் தாய்மார்களில் முதல்கட்டமாக இன்று சிவகங்கை பூங்கா" குழந்தைகள் மையத்தில் 30 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சதயவிழாக் குழுத் தலைவர் து.செல்வம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் (பொ) அனுசுயா, வட்டார குழந்தை திட்ட அலுவலர் பிலோமினா சாஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.