தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னருக்கு ஆங்கிலேயர்கள் வைத்த சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை
’’தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள சரபோஜி ராஜா உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் மாலை அணிவித்த மரியாதை’’
தஞ்சாவூரில் புகழ்பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தை கட்டிய இரண்டாம் சரபோஜி மன்னர் 1777 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 ஆம் தேதி பிறந்தார். இவரின் 244 ஆவது பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. மராத்திய பாரம்பரியத்தில் வந்த சரபோஜி மன்னர் கல்வியிலும், மிகுந்த ஆர்வமுடையாவராக இருந்தார். பிரெஞ்சு, ஜெர்மன், கிரேக்கம், இலத்தீன், வடமொழி தெலுங்கு, தமிழ் முதலிய மொழிகளில் தேர்ச்சியுடையவரானார். 1805 ஆம் ஆண்டில் தேவநாகரி எழுத்தில் இயங்கவல்ல ஓர் அச்சகத்தைத் தஞ்சையில் முதலில் ஏற்படுத்தினார். பிறகு, ஆங்கில அச்சகத்தை நிறுவினார்.
நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வென்றதன் நினைவாக சாளுவநாயகப்பட்டினத்தில் மனோரதம் என்ற அழகிய கோபுரத்தை அமைத்தார். தஞ்சைப் பெருவுடையார் கோயிலுக்கு பல அணிகலன்களையும், வெள்ளிப் பாத்திரங்களையும் தானமாக அளித்ததுடன் பல திருப்பணிகள் செய்ததுடன் பல்வேறு இடங்களில் பல அன்ன சத்திரங்களையும் கட்டினார். சரபோஜி ராஜா, கோட்டைக்கு வெளியில் இருந்த' செவ்வப்ப நாயக்கர் குளத்தை' பழுது பார்த்தார். மேலும் கோட்டைக்குள்ளிருந்த, சிவகங்கை குளத்தை பாதுகாத்தார். இவர் காலத்தில், பெரிய குளத்தில் இருந்த தண்ணீர், சிறிய குளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இது ஜலசுஸ்த்திரம் என்று அழைக்கப்பட்டன. கோட்டையிலிருந்து கழிவுநீரை வெளியேற்ற, தஞ்சாவூர் தெருக்களில், கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
சரபோஜி ராஜா, சிறந்த தமிழ் நூல்களை பிறமொழிகளில் மொழியாக்கமும் செய்தார். அதேபோல், மருத்துவம் சம்பந்தமான பிறமொழியின் சிறந்த நூல்களை தமிழிலும் மொழி பெயர்த்தார். நூல்களை வெளியிடுவதற்காக தனியாக ஒரு அச்சுக்கூடத்தையும் தஞ்சையில் நிறுவினார் சரபோஜி. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளின் பிரசித்திபெற்ற இடங்களை ஓவியங்களாகத் தீட்டி அவற்றை மக்கள் பார்வைக்கு வைத்தார். தமிழ் புலவர்கள் பலருக்கும் தமது அவையில் உரிய இடமளித்து சிறப்புச் செய்தார். கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர் சரபோஜி மன்னரின் அவையில் தலைமைப் புலவராக இருந்தார். இவரது காலத்தில்தான் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியை எழுதினார் என்றும் கூறுவார்கள்.
சரபோஜி மன்னர் 1832 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 7ஆம் தேதி, இறந்தபோது, சரஸ்வதி மகால் நூலகத்தில், சீவகசிந்தாமணி காப்பியம் உள்பட 29 ஆயிரம் ஓலைச்சுவடிகளும், பல்வேறு மொழிகள் சார்ந்த 25 ஆயிரம் நூல்களும் இருந்தன. தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்ய பாடுபட்ட சரபோஜி ராஜாவை கவுரவிக்கும் விதமாக ஆங்கிலேயர்கள், சரபோஜி ராஜாவுக்கு, முழு உருவச்சிலை அமைத்தனர். உலகின் தலைசிறந்த சிற்பியான இத்தாலி நாட்டின் பிளாக்ஸ்மேன் இந்தச் சிலையை வடித்தார். சிலையையும் பீடத்தையும் அமைப்பதற்கான பளிங்குக்கல் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.
சிற்பி பிளாக்ஸ்மேன் சரபோஜி மன்னரின் உயரம், அகலம், கை, கால் நகங்கள் ஆகியவைகூட மிகச் சரியாக இருக்குமாறு சிலையை செதுக்கினார். மன்னரின் காலணி, தலைப்பாகை உள்ளிட்டவைகளை மிகத்துல்லியமாக வடிவமைத்திருக்கிறார் சிற்பி. சட்டை மடிப்பு, சுருக்கங்கள் உள்ளிட்டவைகள்கூட அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளன. சரபோஜி சிலையின் இடுப்பில் மாட்டியிருக்கும் உடைவாள் உறையிலிருந்து வாளை எடுத்துவிட்டு மீண்டும் செருக முடியும். அதேபோல், மன்னரின் தலைப்பாகையையும் தனியாக கழற்றி மாட்டும்படி மிக நுட்பமாக சிலையை செதுக்கியிருக்கிறார் பிளாக்ஸ்மேன்.
சரபோஜி மன்னர் இறந்து பல ஆண்டுகள் கடந்தாலும், தஞ்சாவூர் மக்கள் இன்னமும் அவரை நெஞ்சில் வைத்திருக்கிறார்கள். அதனால் தான் இப்போதுகூட தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு சரபோஜி என்று பெயர் வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பாக ஆட்சி செய்த சரபோஜி ராஜாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சாவூர் அரண்மனை வளாகத்திலுள்ள சரபோஜி ராஜா உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர் மாலை அணிவித்த மரியாதை செலுத்தினார். அவருடன் மராத்திய வம்சத்தினர்கள், சரஸ்வதி மகால் நிர்வாக அலுவலர் ஞானகௌரி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு,மரியாதை செலுத்தினர்.