தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை 1500ஆக உயர்த்த கோரி ஆர்ப்பாட்டம்...!
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றத்திறனாளிகளுக்கு 1500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.
தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்திட கோரி கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தஞ்சை மாநகர செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். தஞ்சை ஒன்றிய செயலாளர் சங்கிலிமுத்து, நிர்வாகிகள் ராதிகா, சசிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற வெளிமாநிங்களில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனை உயர்த்தி மாதம் 1500 ரூபாய் வழங்கப்படுவதாக திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பற்றி கூறாமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.
எனவே, வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதியன்று சட்டமன்றத்தில் வைக்கப்படும் மாற்றுத்திறனாளிகளின் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதை அமல்படுத்தம் வகையில், 1500 உயர்த்தி வழங்கி வேண்டும்.
இதனை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தஞ்சையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்களுக்கான சங்கத்தின் நீண்டகால கோரிக்கையாக, மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை 3 ஆயிரமும், கடும் உடல்பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆயிரமும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகள் 30க்கும் மேற்பட்டோர், தனது மூன்று சக்கர வாகனத்தில் வந்து கலந்து கொண்டு, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டன.
இது குறித்து மாவட்ட செயலாளர் இளங்கோவன் கூறுகையில்,
மாற்றுத்திறனாளிகளுக்கு 3000 மற்றும் 5000 உதவித்தொகை கேட்டிருந்தோம். ஆனால் நிதிஅமைச்சர் தமிழகத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கின்றது என வெள்ளை அறிக்கையில் வெளியிட்டுள்ளதால், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது போல், 1500 ரூபாயாவது வழங்க வேண்டும். தற்போது உள்ள விலைவாசி உயர்வால், மாற்றுத்திறனாளிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமத்தில் இருந்து வருகின்றார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கையில் மாற்றத்திறனாளிகளுக்கு 1500 உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் உள்ளது.
எனவே, தமிழக அரசு வரும் கூட்டத்தொடரின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு, 1500 உயர்த்தி வழங்குவதை அறிவிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் தமிழத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளை ஒன்றிணைத்து, மாநில நிர்வாகிகளின் ஆலோசனைபடி, மிக மிக வீரியத்துடன் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றார்.