”திமுகவை அழிக்க கிளம்பி வந்தவர்களுக்கு..” : தஞ்சையில், விஜய் அரசியல் குறித்து சீறிய உதயநிதி..
பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜனதாவும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா ? என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள்.
தஞ்சாவூா்: வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார். 7வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது என்ற வரலாற்றுப் பதிவை ஏற்படுத்த வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தஞ்சையில் இன்று பூதலூர் வடக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு இல்ல திருமண விழாவை துணை முதல் -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: - நான் துணை முதல்-அமைச்சராக வரவேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்தில் இருந்துதான் வந்தது. அதன் பிறகு நான் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டேன். பொதுவாக நவம்பர் மாதம் மழை பெய்யும் மாதம் என்பார்கள். அது உண்மைதான். இன்று நான் உங்கள் அன்பு மழையில் நனைந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளேன்.
கலைஞர் கருணாநிதி தஞ்சாவூர் தொகுதியில் நின்று வென்றார் . தஞ்சாவூர் மண்ணில் அவர் கால் படாத இடமே கிடையாது . முதல்வர் மு. க. ஸ்டாலின் அடிக்கடி நான் டெல்டாகாரன் என கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன்தான் என்ற பெருமையோடு இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.
இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் நடக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் சிறப்பான ஆட்சி என பலரும் கூறுகிறார்கள். நிதி ஆயோக் புள்ளிவிவரமே கூறியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றி தான் பல மாநிலங்கள் ஆட்சி நடத்தி வருகிறது.
முன்பெல்லாம் மகளிர் வீட்டை விட்டு வருவதற்கு உரிமை கிடையாது படிப்பதற்கு உரிமை கிடையாது. ஆனால் இது அனைத்தையும் மாற்றியது திராவிட இயக்கம்தான். பெண்களின் அடிமை விலங்கை உடைத்தவர் தந்தை பெரியார், அரசு திட்டங்கள் மூலம் தந்தை பெரியார் விரும்பியதை அறிஞர் அண்ணாவும் கலைஞர் கருணாநிதியும் பெண்கள் முன்னேற்ற, உயரே பறக்க சிறகுகள் தந்தார்கள். அதேபோல் மகளிர் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், இலவச பஸ் பயணம் என ஏராளமான திட்டங்களை அமல்படுத்தி மகளிர் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார். மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.
பல அணிகளாக சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜனதாவும் தி.மு.க கூட்டணியில் விரிசல் ஏற்படாதா ? என துண்டு போட்டு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் திட்டவட்டமாக பதில் கூறிவிட்டார். நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.க கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர் .
வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2-வது முறையாக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பார். 7-வது முறையாக திமுக ஆட்சி அமைந்தது என்ற வரலாற்று பதிவை ஏற்படுத்த வேண்டும்.
தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க.வில் எந்த தீர்மானம் நிறைவேற்றினாலும் அது நிறைவேறும் . குறிப்பாக நான் இளைஞரணி செயலாளராக வேண்டும் என்று முதன் முதலில் தஞ்சை மத்திய மாவட்டத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அது நிறைவேறியது. அதன் பின்னர் அமைச்சராக வேண்டும் என்றும், துணை முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுவும் நிறைவேறி உள்ளது. அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டும் இல்லாமல் அதற்காக கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள். மணமக்கள் இருவரும் நன்கு படித்தவர்கள். இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வளமுடன் வாழ வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.