தஞ்சாவூரில் எம்.பி., அலுவலகத்தை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தஞ்சை எம்.பி., அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மணிமண்டபம் பகுதியில் எம்.பி. அலுவலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக தஞ்சைக்கு வருகை தந்தார். நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூருக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் இரவு தஞ்சையில் உள்ள சங்கம் ஓட்டலில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்கினார்.
தொடர்ந்து இன்று காலை மணிமண்டபம் அருகே தஞ்சை எம்.பி., அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கலைஞர் கருணாநிதி படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து எம்பி அலுவலகத்தில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வீணை நினைவு பரிசாக வழங்கினார்.
பின்பு துணை முதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலியை அவரது இருக்கையில் அமர வைத்து பொன்னாடை அணிவித்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த தீர்மானம் புத்தகத்தில் கையெழுத்திட்டார். பின்னர் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிலம்பம், பளு தூக்குதல், தடகளம், குத்துச்சண்டை, மேசைபந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான கபாடி, வாலிபால், தடகளம் உட்பட பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் விளையாட்டு சீருடை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இதில் பள்ளி பிரிவில் 5 பேர் கல்லூரி பிரிவில் 5 பேர் மாற்றுத்திறனாளிகள் பிரிவு 7 பேர் என மொத்தமாக 17 வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற்றனர். இதில் ஆண்கள் 20 பேர் பெண்கள் 24 பேர் ஆவர். மேலும் போட்டிகளில் 6 தங்கப்பதக்கம், 3 வெள்ளி பதக்கம், 9 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரூ. 25.75 இலட்சம் காசோலைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, எம்.பி, முரசொலி, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தஞ்சை மத்திய மாவட்ட கலைஞர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முரசொலி செல்வம் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.