தொடர் போராட்டத்தில் இறங்குவோம்... நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு முடிவுக்கு என்ன காரணம்?
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில், டெல்டா மாவட்ட நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கலந்தாய்வு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது

தஞ்சாவூர்: கிரஷர் விலை ஏற்றத்தை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று கூட்டமைப்பின் மாநில தலைவர் திருசங்கு தெரிவித்தார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு சார்பில், டெல்டா மாவட்ட நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் கலந்தாய்வு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் திருசங்கு தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் அய்யப்பன், மாநிலச் செயலாளர் முருகேசன், மாவட்டத் தலைவர்கள் தஞ்சாவூர் ஜெயக்குமார், திருவாரூர் முத்துவேல், நாகை வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநிலத் தலைவர் திருசங்கு நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சுத்துறை மற்றும் தனியார் துறைகளில் நடைபெறும் கட்டிட பணிகள் அனைத்துக்கும் கிரஷர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த கிரஷர் அருகில் உள்ள புதுக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து வாங்கப்படுகிறது. இந்த கிரஷருக்கான விலை நேற்று முன்தினம் திடீரென யூனிட்டுக்கு ரூ.1,000 அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. திடீரென்று இப்படி எவ்வித அறிவிப்பும் இன்றி விலையை உயர்த்தி உள்ளனர்.
இதனால் ஒப்பந்தகாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கிரஷர் ஜல்லி ஏற்றி வரும் லாரிகளுக்கு ட்ரான்ஸ்சீட் இல்லை எனக் கூறி கனிம வளத்துறை அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த டிரான்ஸ்சீட் வேறு எப்பகுதியிலும் கேட்பதில்லை.
டெல்டா மாவட்டங்களில் உள்ள கனிம வளத்துறையினர் மட்டும் தான் இந்த ட்ரான்ஸ்சீட் கேட்கின்றனர். தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. இதனால் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் கிரஷர் விலை உயர்வு, ட்ரான்ஸ்சீட் பிரச்சினைகளால் இந்த பணிகள் உரிய காலத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் அரசுக்கு தான் அவப்பெயர் ஏற்படும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்டா மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து விளக்கம் அளித்த பின்னர், ஓரிரு நாட்களில் ஒப்பந்தகார்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர். டெல்டா மாவட்டம் முழுவதும் அரசுப்பணிகள் ஏராளமாக நடந்து வருகிறது. இந்நிலையில் இதுபோன்ற தொடர் வேலை நிறுத்தம் ஏற்பட்டால் அப்பணிகள் முழுமையாக தடைப்படும். எனவே இந்த வேலை நிறுத்த போராட்டம் குறித்து அறிவிக்கப்படுவதற்குள் ஒப்பந்ததாரர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் கிரஷர் விலை ஏற்றத்தாலும் இப்போது நடந்து வரும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை தாண்டி செலவுகள் ஏற்படும். இதனாலும் பிரச்னைகள் உருவாகலாம். எனவே இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பின் மிக முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை அரசு நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.





















