மழையில் தப்பி எலிகளிடம் சிக்கிய பயிர்கள் - வேதனையில் மயிலாடுதுறை விவசாயிகள்
’’எலிவெட்டு தாக்குதல் அதிகரித்துள்ளது, 40 முதல் 80 நாட்கள் ஆன பயிர்களை எலிகள் கடித்து கொஞ்சம் நஞ்சம் இருந்த பயிர்களையும் அழிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம்’’
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கி தற்போது வரை தொடர் கனமழையாக பெய்து வருகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக வயல் வெளிகளில் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.
இந்நிலையில் டெல்டாவின் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சாகுபடி பிரதான தொழிலாக அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மயிலாடுதுறை சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பெய்து வரும் கனமழையில் தப்பி நன்கு வளர்ந்து தண்டு உருளும் பருவத்தில் உள்ள சம்பா பயிர்களில் எலி தாக்குதல் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி செய்த செலவுக்காவது பயிர்கள் விளைந்து கைக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என வேதனை தெரிவித்தனர்.
மேலும் இது குறித்து இப்பகுதி விவசாயிகள் விரிவான கூறுகையில், நாற்றுவிட்டு நடவுசெய்ய தொடங்கியது முதல், தொடர்ந்து மழைபெய்து வருவதால் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து பாதிப்படைந்துள்ளது. இந்த ஆண்டு குறுவை சாகுபடியின்போது எலிகள் தாக்குதல் குறைவாக இருந்தது ஆனால் சம்பா, தாளடியில் மயிலாடுதுறை வட்டார பகுதிகளில் எலிவெட்டு தாக்குதல் அதிகரித்துள்ளது, 40 முதல் 80 நாட்கள் ஆன பயிர்களை எலிகள் கடித்து கொஞ்சம் நஞ்சம் இருந்த பயிர்களையும் அழிப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். கிட்டிபோட்டு எலிகளை பிடிக்கும் பணியை பலர் செய்கின்றனர். நூறு கிட்டிகள் போட வேண்டுமென்றால் அதற்கு 500 ரூபாய் சம்பளம் கொடுக்க வேண்டும். பெரும்பாலான இடங்களில் ஒரே நேரத்தில் எலிதாக்குதல் இருப்பதால் கிட்டிகள் போடுவதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் ஒருசில நாட்களிலேயே எலிகள் பயிர்களை நாசம் செய்துவிட்டு சென்றுவிடுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கடந்த ஆட்சிகாலத்தில் கோடைகாலத்தில் ஒருங்கிணைந்த எலி ஒழிப்பு முகாம்களை வேளாண்மைத்துறை மூலம் நடத்தியது. அதேபோன்று, நடப்பு ஆண்டு கோடை காலத்தில் வேளாண்துறை மூலம் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தினால்தான் அடுத்த குறுவை சாகுபடிக்காவது எலிகள் தாக்குதலில் இருந்து பயிரை காப்பாற்ற முடியும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் கடன்பட்டு பெரும் போராட்டத்தில் மத்தியில் விவசாயம் செய்வதாகவும், ஏதேனும் ஒரு வடிவில் தொடர்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நிலை குழைய செய்து விடுவதாகவும், அரசு விவசாயிகளின் நிலை அறிந்து இது போன்ற பிரச்சினைகளில் இருந்து காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.