கட்டு... கட்டு மூட்டையை கட்டு: விடுமுறை முடிந்ததால் பஸ்கள், ரயில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தொடர் விடுமுறை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிபுரிவதற்காக குடும்பத்தினருடன் திரும்பி சென்றனர்.

தஞ்சாவூர்: பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த மக்கள் வெளியூர் புறப்பட்டதால் பஸ்கள், ரெயில்களில் கூட்டம் அலைமோதியது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய பஸ்சிற்காக வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை கடந்த 14-ந் தேதி கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக பல்வேறு மாவட்டங்களில் பணிபுரியும் மக்கள் தங்களது குடும்பத்தினருடன் தஞ்சை மாவட்டத்திற்கு ரயில்கள், பஸ்களில் வந்தனர். இவர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை தங்களின் சொந்த ஊரில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. பல தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு 4 நாட்களுக்கு மேல் விடுமுறை அளித்திருந்தது. இதனால் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். தொடர் விடுமுறை ஞாயிற்றுக்கிழமை இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிபுரிவதற்காக குடும்பத்தினருடன் காலை முதல் திரும்பி சென்றனர். முன்னதாக காணும் பொங்கலின் போது தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்கள் சென்னை, கோவை, திருப்பூர், மதுரை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற பஸ்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. இதனால் டவுன் பஸ்கள் கூட திருச்சிக்கு இயக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காத்திருந்து பஸ் ஏறும் நிலை ஏற்பட்டது. முக்கியமாக திருச்சியிலிருந்து சென்னைக்கு செல்லலாம் என்று நினைத்து குழந்தைகளுடன் வந்தவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதேபோல் தஞ்சை விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் விரைவு பஸ்களில் இடம் கிடைக்காதவர்கள் புறநகர் பஸ்கள் மூலம் சென்னைக்கு சென்றனர். பஸ்களில் கூட்டம் அதிகம் இருந்ததால் நெருக்கி அடித்துக் கொண்டு பஸ்களில் மக்கள் ஏறினர். இதனால் மக்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அதேபோல் தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் உழவன் விரைவு ரெயில் மற்றும் தஞ்சை வழியாக சென்னைக்கு சென்ற விரைவு ரெயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகளில் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யாதவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கியபடியே சென்னைக்கு பயணம் மேற்கொண்டனர்.
இதே நிலைதான் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலும் காணப்பட்டது. கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லும் பஸ்களில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதுமட்டுமின்றி பைக்குகளிலும் பலர் சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். கடந்த 6 நாட்கள் அருமையாக விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய மக்கள் இன்று குடும்பத்தினரை பிரிந்து சோகத்துடன் சென்றதையும் காணமுடிந்தது. தங்களின் அக்கா, அண்ணன், அப்பா, சித்தப்பா, பெரியப்பா என்று பலரையும் வழியனுப்ப குடும்பத்தினர் வந்திருந்தனர்.

