நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் இன்று தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல்: தஞ்சாவூரில் சுறுசுறுப்பு
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இன்று தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்து வருகிறது. 8 சங்கங்கள் போட்டியிடுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு அளிப்பவர்கள் வரிசையில் நின்று வாக்கு அளித்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்து உடனே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழத்தில் உள்ள பணியாளர்களுக்கான தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்துக்கான தேர்தல் இன்று தமிழ்நாடு ழுழுவதும் நடந்து வருகிறது. இதில் 8 தொழிற்சங்கங்கள் போட்டியிடுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1972-ம் ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஏற்படுத்தப்பட்டு, இதன் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கும், அரசுக்கும் பாலமாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழிற்சங்கத்தினர் தங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றத் தர நிர்வாகத்தோடு பேசுவதற்கு அங்கீகாரம் பெற வேண்டும் என்பதால் அவ்வப்போது தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கடந்த 2009 ம் ஆண்டு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அதன்பின்னர் இந்த தேர்தல் நடைபெறவில்லை.
இந்நிலையில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலை நடத்த வேண்டும் என சிலர் நீதிமன்றத்தை நாடியதை அடுத்து, மீண்டும் தேர்தல் நடத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று (10ம் தேதி) தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் அகில இந்திய பார்வர்ட் பிளாக், அனைத்து தொழிலாளர் நலச்சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அனைத்து பணியாளர்கள் மற்றும் சுமை பணியாளர்கள் பொது நலச்சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அனைத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு சிவில் சப்ளையஸ் கார்ப்பரேஷன் பாரதிய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர்கள் சங்கம் என 8 சங்கங்கள் போட்டியிடுகிறது.
தஞ்சாவூரில் நடந்து வரும் இந்த தேர்தலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் முதல் பருவகால தொழிலாளர்கள் வரை வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த தேர்தலை தொழிலாளர் நலத்துறையின் உயர் அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்து வருகிறது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய மூன்று இடங்களிலும் இந்த தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 351 நிரந்தரப் பணியாளர்களும், 1,586 தற்காலிக, பருவகால பணியாளர்களும் என மொத்தம் 1,937 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்களித்த பின்னர் உடனடியாக அந்தந்த இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு இன்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் தேர்தல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.





















