பணம் மற்றும் ஸ்மார்ட் போனுடன் கீழே கிடந்த கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதி!
மயிலாடுதுறையில் கீழே கிடந்த கைப்பையை காவல்துறை மூலம் உரியவர்களிடம் ஒப்படைத்த தம்பதிக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மாணிக்க பங்கு கிராமத்தை சேர்ந்த ஜாய் இரத்தினசாமி என்பவரது மனைவி 35 வயதான சுமதி. இவர் நேற்று மயிலாடுதுறையில் வசிக்கும் தனது தங்கச்சி முத்துலட்சுமியுடன் ஜவுளி எடுப்பதற்காக மயிலாடுதுறை கடைவீதிக்கு சென்று உள்ளார். பெரிய கடை வீதியில் செல்லும் போது சுமதியின் கைப்பை தொலைந்து போய் உள்ளது. அதில் 3 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் ஸ்மார்ட் செல்போன் இருந்துள்ளது. கைப்பை காணாமல் போனதை அடுத்து பதறிப்போன சுமதி செய்வதறியாது திகைத்துப்போய் தான் தவறவிட்ட கைப்பையை அவர் சென்ற பல இடங்களில் தேடி அழைத்துள்ளார். எங்கு தேடியும் காணாமல் போன கைப்பை கிடைக்காத விரக்தியில் மன வேதனையுடன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மயிலாடுதுறை பெரிய கடை வீதியில் வழியை சென்ற வில்லியநல்லூர் சேர்ந்த சேகர், மாலதி தம்பதியினர் கீழே கைப்பை கிடப்பதை கண்டு எடுத்து பார்த்துள்ளனர். அப்போது அதன் உள்ளே ஸ்மார்ட் செல்போன் மற்றும் பணம் இருப்பதை கண்டு தவற விட்டவர்களை எண்ணி வருந்தி, அந்த கைப்பையில் இருந்த செல்போன் மூலம் கைப்பையை தொலைத்தவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த மாலதி, கைப்பையை தவற விட்ட சுமதியிடம் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு வந்து கைப்பையை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து அந்த கைப்பையை மயிலாடுதுறை காவல் நிலையம் சென்று மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வத்திடம் கீழே கிடந்த கைப்பையை எடுத்த விபரத்தினை கூறி சேகர், மாலதி தம்பதியினர் ஒப்படைத்தனர். இதனை கேட்ட காவல் ஆய்வாளர் செல்வம் கீழே கிடந்த பொருளை எடுத்துச் செல்லாமல் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் மனிதநேயமிக்க செயலை செய்த மாலதி மற்றும் அவரது கணவரை காவல்துறையினர் சார்பில் பாராட்டு தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கைப்யை தொலைத்த சுமதி காவல்நிலையம் வர அவரிடம் இனி இதுபோன்று கவன குறைவாக இருக்க கூடாது என கூறி கைப்பையை மாலதியிடம் கொடுத்து அவர் கையால் உரியவர்களிடம் ஒப்படைத்தார். சாலையில் நடந்து செல்லும் போது அடுத்தவர்களின் கைப்பை, செல்போன் மற்றும் நகைகளை பறித்துச் செல்லும் சம்பவங்கள் நடைபெறும் இதேவேளையில் கீழே கிடந்த பொருளை எடுத்து அதன் மீது ஆசை கொள்ளாமல் உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!