(Source: ECI/ABP News/ABP Majha)
நோயாளியை தாக்கியதாக மாறி மாறி புகார்....பரபரப்பான மயிலாடுதுறை அரசு மருத்துவமனை
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நோயாளியை தாக்கியதாக காவலர் மீதும், காவலரை தாக்கியதாக நோயாளி உறவினர்கள் மீதும் மாறிமாறி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் 600க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி தாலுக்கா பகுதிகளுக்கு பிரதான மருத்துவமனையாக விளங்கி வரும் இந்த அரசு பெரியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள், சலவைதொழிலாளர்கள், பாதுகாவலர்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் குத்தாலம் தாலுக்கா கடலங்குடி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா என்பவரின் மனைவி தேவயானிக்கு பிறந்த குழந்தையை பார்ப்பதற்காக கணவர் சூர்யா மற்றும் உறவினர்கள் வந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாவலராக இருந்த டேவிட் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சூர்யா அவரது தம்பி ரகு ஆகியோர் பாதுகாவலர் டேவிட்டை கடுமையாக தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் சூர்யா, ரகு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து சிகிச்சையில் உள்ள தேவயானியை தனியார் நிறுவன பாதுகாவலர்கள் திட்டி அடித்ததாக குற்றம்சாட்டி உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு பாதுகாவலர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் இன்று மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் பாதுகாவலர் டேவிட்டை தாக்கிய சூர்யா, ரகு ஆகியோரை கைது செய்யப்படாததை கண்டித்தும், பணிபாதுகாப்பு வழங்க கோரியும் மருத்துவமனை முன்பு பணிகளை புறக்கணித்து ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இருவரையும் கைது செய்வதாக அளித்த வாக்குறுதியின்பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை, 1.5 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான தீபாவளி சிறப்பு விற்பனையை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஆர்.லலிதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸில் இந்த ஆண்டு சிறப்பு வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம் ஆரணி திருபுவனம் பட்டு புடவைகள் கோவை கோரா காட்டன் சாரிகள், கூறைநாடு புடவைகள் பல்வேறு ஊர்களில் நெசவாளர்கள் நெய்த பருத்தி சேலைகள், இந்த ஆண்டு புதுவரவாக லினன் சேலைகள், மேலும் போர்வைகள் படுக்க கைவிரிப்புகள் தலையணை உறைகள் வேட்டிகள் லுங்கி துண்டு ரகங்கள் பருத்தி சட்டைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வரவைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோ -ஆப்டெக்ஸ் கடலூர் மண்டலத்திற்கு 14 கோடி ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ஒரு கோடி ரூபாயும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோ- ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கனவு திட்டத்தின் படி வாடிக்கையாளர்கள் தவணை திட்டத்தில் 11, 12 வது மாத தவணைகளை கோ-ஆப் டெக்ஸ் நிறுவனம் செலுத்தும் மேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடி 30 சதவீதம் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு கடன் விற்பனை வசதியும் உண்டு என்றும் அனைத்து துறை ஊழியர்களும் கைத்தறிக்கு கை கொடுத்து உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்துள்ளார். நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கோட்டாட்சியர் செல்வி யுரேகா, கோ-ஆப் டெக்ஸ் மண்டல மேலாளர் தா.ரமணி, மயிலாடுதுறை விற்பனை நிலைய மேலாளர் S.குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.