TN Rain: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட வேளாண் இணை இயக்குநர் தலைமையில் குழு - ஆட்சியர் தகவல்
மயிலாடுதுறை மழை பாதிப்புகள் குறித்து பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் ஆய்வு செய்தார்.
![TN Rain: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட வேளாண் இணை இயக்குநர் தலைமையில் குழு - ஆட்சியர் தகவல் Committee headed by Joint Director of Agriculture to count crops affected by rain and flood in Mayiladuthurai District TNN TN Rain: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கிட வேளாண் இணை இயக்குநர் தலைமையில் குழு - ஆட்சியர் தகவல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/5321ad9a2ffb5c96a0f8a3e0266ff5761699960803443733_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16 -ஆம் தேதி மாறும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது நேற்று முதல் தொடர்ந்து பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மிதமான மழை பெய்து வந்தது. நேற்று மதியம் முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மிதமான மழை விடிய விடிய பெய்து தற்போதும் தொடர்கிறது.
மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே போன்று கன மழையை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைமை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடாமல் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதாலும், சம்பா மற்றும் தாளடி விவசாயத்திற்கு உகந்தது என்பதாலும் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் மழை நீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருவதை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பட்டமங்கலம் ஆராயத்தெரு, கே.கே.ஆர்.நகர், கூறைநாடு, கிட்டப்பா பாலம் அமைந்துள்ள பகுதி ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் நகராட்சி மூலம் மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, கனமழை தொடரும் பட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்தும் நகராட்சி ஆணையரிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில்,
மயிலாடுதுறை மாவட்டத்தை பொறுத்தவரையில், வடகிழக்கு பருவமழை தீவிரமாகி இருக்கிறது. நேற்று மதியம் முதல் மழையானது விட்டு விட்டு பெய்தது, இரவு நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலையில் இருந்து 8.5 செ.மீ. மழை மாவட்டம் முழுவதும் பெய்து இருக்கிறது. காலை 6 மணியில் இருந்து மதியம் வரை 3.5 முதல் 4. செ.மீ. வரை மழை பெய்தது. இதுவரைக்கும் மழை குறைவாக இருந்தது. தற்போது அதிகமாக பெய்வதனால், இன்னும் பெரிய அளவில் தண்ணீர் தேங்க ஆரம்பிக்கவில்லை. அனைத்து துறையிலும் முன்னேற்பாடு பணிகளை முடுக்கி விட்டுள்ளோம். சிறு சிறு இடங்களில் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக இல்லாத இடங்களில் உடனுக்குடன் மழைநீர் வடிவதற்கு ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல், சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வேளாண் பயிர்கள் மழையினால் ஏதும் பாதிப்படைகிறதா என்பதனை ஆய்வு செய்ய வேளாண்மைத் துறை அலுவலர்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நீர்வளத்துறையினர் மூலம் தாழ்வான பகுதிகளுக்கு தேவையான மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இவ்வாய்வின் போது, மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், நகராட்சி ஆணையர் சங்கர், நகராட்சி பொறியாளர் மகாதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)