தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம்
பெரிய கோயில் சித்திரை திருவிழா, மார்ச் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல், 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது
தஞ்சை பெரிய கோயில், தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமாகவும், இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் கிபி 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.
1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். காஞ்சியில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் ராஜராஜனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, இளங்காட்டில் இராஜராஜ சோழனால் கட்டப்பெற்ற செங்கல்லால் ஆன சிறிய கோயில்தான் முன் மாதிரியாகும்.
இக்கோயிலின் தலைமைச் சிற்பி குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் எனக் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் அடிப்பாகம் 5 மீட்டர் (16 அடி) உயரம் கொண்டுள்ளது. ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடையும், இரண்டு மீட்டர் உயரம், ஆறு மீட்டர் நீளம், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாகவும், லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக, இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியுமாகவும் உள்ளது. 108 பரத நாட்டிய முத்திரைகளைக் காட்டும் நடனச் சிற்பங்கள் வெளிச்சுவற்றின் மேற்பகுதியில் வடிக்கப்பட்டுள்ளன
தஞ்சைப் பெருவுடையார் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருண்மொழிவர்மன் இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80 டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே இறைவன் பெருவுடையார் மேல் விழுகிறது.
உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, மார்ச் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்ரல், 16 ஆம் தேதி வரை பதினெட்டு நாள்கள் பெருவிழா கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, பஞ்சமூர்த்தி புறப்பாடு ஏப்ரல் 12 ஆம் தேதியும், தேரோட்டம், ஏப்ரல் 13 ஆம் தேதியும் நடைபெறுகிறது. விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் நடை பெற்றது. இதையொட்டி, பால், சந்தனம் உள்ளிட்ட மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யட்ட, பந்தல்க்கால் நடப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன், அறநிலையத் துறை கண்காணிப்பாளர் சந்திரசேகரன், சிவச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.