மைதானங்களில் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாட குழந்தைகளை ஊக்குவியுங்க.. முக்கிய அறிவுரை..
குழந்தைகளை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி ஆலோசனை வழங்கி உள்ளார்.
தஞ்சாவூர்: குழந்தைகளை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி.சுபாஷ் காந்தி ஆலோசனை வழங்கி உள்ளார்.
கோடை விடுமுறை
பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வுகள் முடிந்து தற்போது கோடை விடுமுறை விடப்பட உள்ளது. இதனால் விடுமுறையை கொண்டாட குழந்தைகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் பெற்றோர்கள் குழந்தைகளை மைதானங்களில் விளையாடுவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
உடல் பருமனால் ஏற்படும் நோய்கள்
உலகில் ஐந்தில் ஒருவர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் உள்ளவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,மாரடைப்பு, இதய நோய், புற்றுநோய், மலட்டுத்தன்மை, பித்தப்பை கல், உறக்கமின்மை, எலும்பு தேய்மானம், சுவாச கோளாறு, மூட்டு வலி போன்ற நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாகின்றது. மாமிசம், எண்ணெயில் பொரித்த உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுதல் ஆகியவை உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணங்களாக உள்ளன.
கீரை, பழங்கள், சிறுதானியங்கள்
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடும் பீட்சா, பர்கர் போன்ற உணவுகள் மைதாவில் இருந்து தான் தயார் செய்யப்படுகிறது. மைதாவில் நார்ச்சத்து கிடையாது. இதனால் மைதா மூலம் தயாரிக்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிடும்போது உடம்பில் கெட்ட கொழுப்பு அதிகரிக்கும். எதிர்காலத்தில் இரத்த அழுத்தம் அதிகரிப்பதுடன் சர்க்கரை நோய் வரும். இதய பாதிப்பு பக்கவாதம் ஏற்படும். இதனால் நார்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய கீரைகள், பழங்கள் சிறுதானியங்களை குழந்தைகளுக்கு சாப்பிடுவதற்கு அளிக்க வேண்டும். கீரை போன்ற உணவுகளை குழந்தைகள் எடுத்துக்கொள்ள பெற்றோர்கள் பழக்கப்படுத்த வேண்டும்.
பாரம்பரிய தின்பண்டங்கள்
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வரக்கூடிய காரணிகளை குழந்தை பருவத்திலேயே தவிர்க்க வேண்டும். நல்ல பழக்கத்துடன் நல்ல சத்தான உணவுப் பொருட்களை சாப்பிடுவதற்கு சிறுவயதில் முதலே கற்றுக்கொடுக்க வேண்டும். தொற்ற நோய்களான சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை தான் சவாலாக இருக்கிறது. நமது முன்னோர்கள் கருப்பட்டியில் செய்த பாரம்பரிய தின்பண்டங்களை குழந்தைகளுக்கு கொடுத்தனர். ஆனால் இன்றைக்கு கடலைமிட்டாய், எள்ளுருண்டை எங்கேயாவது சில இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கல்கோனா என்ற மிட்டாய் காணாமலேயே போய்விட்டது.
மைதானங்களில் குழந்தைகள் விளையாட வேண்டும்
கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை மீண்டும் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் பாரம்பரிய உணவு பண்டங்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நாள்தோறும் உடற்பயிற்சி, ஏதாவது ஒரு விளையாட்டு, 30 முதல் 45 நிமிட நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் மைதானங்களில் விளையாடுவதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற உபகரணங்களை பயன்படுத்தி விளையாடுவதை தவிர்த்து கபடி, கோகோ, நொண்டி, பச்சைக் குதிரை தாண்டுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை மைதானங்களில் விளையாடும் பழக்கத்தை இளைய தலைமுறையினர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டில் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 45 வயதை கடந்த ஆண், பெண் இருபாலரும் 6 மாதத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். யோகா, தியானம், வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சி, சரிவிகித உணவு, சிறந்த வாழ்வியல் முறைகளை கடைபிடித்தல் ஆகியவற்றால் உடல் பருமன் நோய்க்கு விடை கொடுக்க முடியும்" இவ்வாறு அவர் கூறினார்.