“ஆளுநர் தனி தர்பார் நடத்த முடியாது; அமைச்சரவை எழுதி கொடுப்பதை படிப்பது தான் அவருக்கு வேலை” - டென்ஷனான எம்.எல்.ஏ
கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர் தான். அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது. தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை.
தஞ்சாவூர்: "கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர் தான். அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது. தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை. தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி" என்று சட்டசபை பொதுக் கணக்கு குழு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வபெருந்தகை தெரிவித்தார்.
தஞ்சாவூரில், அரண்மனை வளாகத்தில் நுழைவு வாயில் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட தரைத்தளத்துடன் 5 தளங்கள் கொண்ட தனித்துவமான கட்டிடக்கலை பாணியில் அமைக்கப்பட்டது. கட்டிடத்தின் இந்த வகை வடிவமைப்பு அம்சம் ஜரோகா என்று அழைக்கப்பட்டது. பின்னர் மராட்டியர் ஆட்சி காலத்தில், புனரமைப்பு செய்தனர். இந்த கட்டிடம் தற்போது சார்ஜா மாடி என அழைக்கப்பட்டுகிறது.
பராமரிப்பின்றி இருந்த கட்டிடத்ததை தமிழக தொல்லியல்துறையினர் ரூ.9.12 கோடி மதிப்பில் புனரமைப்பு பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சட்டசபை பொதுக் கணக்கு குழு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர், சார்ஜா மாடி மற்றும் தர்பார் மண்டபத்தை ஆய்வு செய்ய சென்றனர். இவர்களுடன் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் சென்றார்.
அப்போது, தொல்லியல்துறை சார்பில், பணிகள் குறித்த அறிக்கை அடங்கிய பேப்பர்களை செல்வபெருந்தகையிடம் வழங்கினர். மேலும், அங்கு நடக்கும் பணிகள் குறித்த பலகையும் வைக்கப்பட்டு இருந்தது. அதில், கவர்னர் அறிவுரையின் பேரில் பணிகள் துவங்கப்பட்டு நடப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை பார்த்த எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை டென்ஷனாகி, கவர்னர் அறிவுரையில் தான் பணிகள் நடக்கிறதா எனக் கேட்டு தொல்லியல்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடிந்துக்கொண்டார்.
பின்னர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது; ”கட்டிடம் புனரமைப்பு பணிகள் அறிக்கையில், கவர்னர் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர். கவர்னர் அறிவிக்கவில்லை. தமிழக முதல்வர் தான் அறிவித்தார். அதை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறியுறுத்தியுள்ளோம்.
கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர் தான். அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது. தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை. தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி. எனவே இங்கு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எனவே, அதில் கவர்னர் பெயரை அகற்ற சொல்லியுள்ளோம்" என்றார்.
மேலும் சரஸ்வதி மஹால் நூலகத்தில் காணொளிக் காட்சி அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பெருமைமிகு தஞ்சை பெரிய கோயில் மற்றும் கல்லணை உள்ளிட்ட சுற்றுலா சிறப்பிடங்களை பற்றிய காணொளிக் காட்சியை பொது கணக்கு குழுவினர் பார்வையிட்டார்கள். ராஜாமிரசுதார் அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்த பொதுக் கணக்கு குழுவினர் மருந்துகள் இருப்பு பிரிவு, கண் சிகிச்சை பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுமக்களிடம் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் செயல்படுகிற மாணவியர் விடுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குருங்குளம் மேற்கு கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு வேளாண் பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரும் பணிகளை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக்கணக்கு குழு சார்பு செயலாளர் ஜெ. பாலசீனிவாசன், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி;, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, மருத்துவ கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாநகராட்சி நல அலுவலர் சுபாஷ் காந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணன், மற்றும் பலர் இருந்தனர்.