தஞ்சை மாவட்டத்தில் 4ஜி சேவைகள் வழங்க மும்முரமாக செயல்படும் பி.எஸ்.என்.எல் நிறுவனம்
தஞ்சை மாவட்டத்தில் 44 இடங்களில் 4ஜி சேவைகள் வழங்க பணிகள் மும்முரம்: பி.எஸ்.என்.எல். தஞ்சை பொது மேலாளர் தகவல்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 44 இடங்களில் 4 ஜி சேவைகள் வழங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தஞ்சாவூர் பொது மேலாளர் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் தஞ்சாவூர் தொலைத்தொடர்பு மாவட்டத்தின் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான முதலாவது தொலைபேசி ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகையில், வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் உள்ள பகுதிகளில் 4ஜி சேவை வழங்கி பி.எஸ்.என்.எல். வணிகத்தைப் பெருக்க வேண்டும். பட்டுக்கோட்டை சாலையில் உளூர் பகுதியிலும், மன்னார்குடி சாலையில் நெய்வாசல் பகுதியிலும் செல்போன் சிக்னல்களை மேம்படுத்த வேண்டும். உளூர் கிழக்கு கிராமத்துக்கு யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ள 4 ஜி கோபுரத்தை வாண்டையார்இருப்பு, உளூர் மேற்கு பகுதிகளுக்கும் சேவை கிடைக்கும் வகையில் பொதுவான இடத்தில் அமைக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பி.எஸ்.என்.எல். தஞ்சாவூர் பொது மேலாளர் பால. சந்திரசேனா பேசுகையில், தஞ்சாவூர் தொலைத் தொடர்பு மாவட்டத்தில் 44 இடங்களில் 4ஜி சேவைகள் வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகின்றன. உளூர் கிழக்கு, விரயன்கோட்டை கிராமங்களில் மத்திய அரசின் யு.எஸ்.ஓ.எப். திட்டத்தின் கீழ் 4ஜி சேவைகள் வழங்கப்படவுள்ளன என்றார் அவர். தஞ்சாவூர் மேயர் சண். ராமநாதன், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆர். செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பி.எஸ்.என்.எல். துணைப் பொது மேலாளர் (நிர்வாகம்) எஸ். ராஜகுமார் வரவேற்றார். நிறைவாக, துணைப் பொது மேலாளர் (திட்டம்) எஸ். சிவசங்கரன் நன்றி கூறினார்.
4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை இதுவரை மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு வழங்காமல் இருந்தது. இதனால் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனையடுத்து 2019-ல் மத்திய அரசு 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பிஎஸ்என்எல்-க்கு வழங்க மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி நாடு முழுவதும் 24,680 கிராமங்களுக்கு பி.எஸ்.என்.எல் 4ஜி மொபைல் சேவையை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை 1.64 லட்சம் கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்யும் திட்டத்திற்கும், நாட்டின் 4ஜி மொபைல் சேவை இல்லாத கிராமங்களில் ரூ. 26,316 கோடி மதிப்பில் அதனை முழுமையாக வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 24 ஆயிரத்து 680 கிராமங்களுக்கு 4ஜி மொபைல் சேவை வழங்கப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் 4 ஜி கிடைத்தால் கிராம மக்கள் வெகுவாக பயன்பெறுவர். இதனால் இன்டர்நெட் வேகம் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.