தஞ்சை மாவட்டத்தில் 27,990 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது
மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர், அரசு பஸ்,வாகன ஒட்டிகள், கார்களில் முககவசம் இல்லாமல் வந்தவர்களை மறித்து, கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அனைவரையும் முககவசம் அணிய வைத்தார்
தஞ்சை மாநகராட்சி, கல்லுகுளம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா ஊக்குவிப்பு தடுப்பூசி முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நேரில் பார்வையிட்டு ஆய்வு பின் நிருபர்களிடம் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் இதுவரை நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்கள், மற்றும் மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட 20,38,500 பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டு, 17,60,782 பயனாளிகளுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,71,205 பயனாளிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 3.ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுவரையிலான 1,11,400 பள்ளி, கல்லூரி செல்லும் மற்றும் செல்லாத சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இதுவரை 87431 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 10ஆம் தேதி அன்று முதல் சுகாதாரபணியாளர்கள், முன்களபணியாளர்கள் , 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு ஊக்குவிப்பு தவணை செலுத்தப்படுகிறது.
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அனைத்து ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகளில் இம்முகாம்கள் நடைபெற்று வருகிறது. இம்முகாம்கள் மூலம் சுமார் 27,990 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு இதுவரை 318 பயனாளிகளுக்கு தடுப்புசி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு முகாமிற்கும் 4 பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை, இந்திய மருத்துவ கழகம், செஞ்சிலுவை சங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு மாவட்ட அளவிலான கூட்டங்களையும், வட்டார அளவிலான கூட்டங்களையும் நடத்தி அனைத்து துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள். தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயனாளிகள் அனைவரும் இரண்டாம் தவணை தடுப்பூசியினை தகுந்த கால இடைவெளியில் தவறாது செலுத்திக்கொள்ள வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்ள 4474 படுக்கைகளில் 1031 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது.தற்போது உலக அளவில் ஒமிக்ரான் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் வாய்ப்பு உள்ளதால் பொது மக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொண்டும், கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும், முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், பொது மக்கள் அனைவரும் கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர், தஞ்சை மணிமண்டபம் அருகில் காரை விட்டு இறங்கி, அரசு பஸ்,வாகன ஒட்டிகள், கார்களில் முககவசம் இல்லாமல் வந்தவர்களை மறித்து, கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கூறி, அவர்கள் அனைவரையும் முககவசம் அணிய வைத்து, அனுப்பி வைத்தார்..அவருடன் நகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம், தஞ்சாவூர் வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.