பாரத் பந்த்: தஞ்சாவூரில் பஸ் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட 1750 பேர் கைது
’’மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து இன்று நாடு முழுவதும் பாரத் பந்த் நடந்து வருகிறது’’
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டம், தேசிய பணமயமாக்கல் ஆகிய சட்டங்களுக்கு எதிராகவும், மோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர், தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து தொழிற்சங்க நிர்வாகிகள் பேசினர்.
தற்போது கடந்த 8 ஆண்டுகளாக மத்திய அரசின் பொறுப்பில் இருக்கும் பாசிச மோடி அரசாங்கமானது மக்களுக்கு சேவை செய்கிற அத்தியாவசிய பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயப்படுத்தி வருகிறது, அவர்களுக்கு சேவை செய்கிறது. போராடிப் பெற்ற தொழிற்சங்க உரிமைகள் சட்டங்கள் நான்காக குறைக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கொரானா முதல் அலை,இரண்டாம் அலையில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. சிறு,குறு தொழில்கள் முடங்கியுள்ளது. பொருளாதாரம் சரிவடைந்து வருகின்ற நிலையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வால் அத்தியாவசிய உணவுப் பண்டங்கள், காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
அன்றாடம் உழைத்து வாழும் ஏழை,எளிய, நடுத்தர மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.இவர்கள் துயர் துடைத்து பாதுகாக்க வேண்டிய மத்திய மோடி அரசாங்கம் தனது பொறுப்பில் இருந்து விலகி கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக தேசிய பண மயமாக்கல் என்ற திட்டத்தின் மூலம் 400 ரயில்வே நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 15 தேசிய விளையாட்டு அரங்குகள் , இருபத்தி ஆறாயிரத்து எண்ணூறு கிலோ மீட்டர் தொலைவு தேசிய நெடுஞ்சாலைகள், பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு டவர்கள், ஓஎன்ஜிசி, கெயில் உள்ளிட்ட எண்ணெய் எரிவாயு குழாய்கள் உள்ளிட்ட அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு 25 ஆண்டுகாலத்திற்கு ஏலம் மற்றும் குத்தகைக்கு விட்டு 6 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட போகிறோம் என்று அறிவித்துள்ளது உள்ளிட்டவைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர், சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் என். மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே.ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், வங்கி ஊழியர் சங்கத் தலைவர் க.அன்பழகன், ஏஐடியூசி நிர்வாகிகள் துரை. மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் ரயிலை அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலசெயலாளர் டெல்லிபாபு, மாநில பொது செயலாளர் துரைமாணிக்கம், மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரயிலை மறிக்க சென்றவர்களை போலீசார் பேரிகார்டை கொண்டு மறித்ததால்,போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனாலும், போராட்டக்காரர்கள், பேரிகார்டை தாண்டி குதித்தும், பேரிகார்டைகள்ளி விட்டும,ரயிலை மறித்தனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பானது. இந்த ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள்,விவசாயிகள் கலந்து கொண்டனர். இதே போல் கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருவிடைமருதுார், பூதலுார் உள்ளிட்ட அனைத்து தாலுகாகளிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நடைபெற்ற பஸ் மறியல் மற்றும் 4 இடங்களில் நடைபெற்ற ரயில் மறியலில் 1750 பேரை போலீசார் கைது செய்தனர்.