”கூலிங்கா கொடுங்க - டாஸ்மாக்கில் பீர் விற்பனை ஜோர்” இதுதான் காரணம்..!
பனி, மழை, வெயில் என எந்த பருவநிலை நிலவினாலும் உற்சாகமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மதுப்பிரியர்கள் மட்டும்தான்.

தஞ்சாவூர்: கொளுத்தும் கோடை வெயிலால் டாஸ்மாக்கில் எகிருது பீர் விற்பனை என்று தெரிய வந்துள்ளது. முக்கியமாக இளம் தலைமுறை கூலிங் பீரை தேடி, தேடி வாங்குறாங்க.
பனி, மழை, வெயில் என எந்த பருவநிலை நிலவினாலும் உற்சாகமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் மதுப்பிரியர்கள் மட்டும்தான். உணவுப் பிரியர்கள் பருவகால மாற்றத்துக்கு ஏற்ப எப்படி விதவிதமான உணவு வகைகளை சாப்பிடுகிறார்களோ? அதேபோல மதுப்பிரியர்களும் மழைக்காலம், வெயில்காலம் என்று பருவநிலைக்கு ஏற்ப மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்..
இதில், கொளுத்தும் கோடை வெயிலுக்கு இதமாக 'பீர்' வகைகள் தான் தற்போது மதுப்பிரியர்களின் தேர்வாக உள்ளது. அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் தொடங்கியதுமே மற்ற மதுபான வகைகளை வாங்கி பருகுவதை குறைத்துவிட்டு 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி பருகுகின்றனர். முக்கியமாக தஞ்சாவூர் பகுதியில் வாலிபர்கள் டாஸ்மாக்குகளில் அதிகளவில் பீர் பாட்டில்களை வாங்குகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
உச்சந்தலையில் புகுந்து உள்ளங்கால் வழியாக கொளுத்தும் கோடை வெயில் வெளியேறுகிறது. முக்கியமான மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வெயில் தாக்கம் அதிகம் இருக்கிறது. சாலைகளில் கானல் நீர் சாலைகளில் பளபளவென்று மினுக்குகிறது. வாகன ஓட்டுனர்கள் வெயில் தாக்கத்தால் மதிய வேளையில் வாகனத்தையே எடுப்பதில்லை. இப்படி மக்கள் வெயில் தாக்கத்தால் படாதபாடு படும் போது மது பிரியர்களே... இதெல்லாம் எங்களுக்கு ஜூ...ஜூப்பி என்று டாஸ்மாக்குகளில் பீர் வாங்கி பிரிட்ஜில் வைத்து ஜில்லுன்னு உடலை கூலிங் படுத்துக் கொள்கின்றனர்.
அதிலும் குளிரூட்டப்பட்ட 'பீர்' வகைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் கோடை காலத்தில் 'பீர்' விற்பனை பலமடங்கு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கம் வரை 'பீர்' வகைகளின் விற்பனை குறைவாகவே இருந்தது. மார்ச் மாத இறுதியில் இருந்து தற்போது வரை 'பீர்' விற்பனை சக்கை போடு போடுகிறதாம்.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு மற்றும் குளிர்பானங்களை தேடிச்சென்றனர். ஆனால் மதுப்பிரியர்களோ 'பீர்' வகைகளை அதிக அளவில் வாங்கி பருக தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக தஞ:சை பகுதி டாஸ்மாக் கடைகளில் ஒரு நாளைக்கு நூற்றுக்கும் அதிகமான பீர் வகைகள் கிடுகிடுவென்று விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மது பிரியர்கள் தரப்பில் கூறுகையில், ஒரே ஒரு குறைதான். ஜில்லுன்னு பீர் கிடைக்க மாட்டேங்குது. அதனால 4, 5 பாட்டில்கள் வாங்கிக்கிட்டு போய் வீட்டில் யாருக்கும் தெரியாம பிரிட்ஜில் ஒளிய வைக்க வேண்டி இருக்கு. டாஸ்மாக்குகளில் இனி பீர் பாட்டில்களுக்கும் கிராக்கி ஏற்பட்டு விடும். கூடுதலாக விலை வைக்காமல் எங்க சிரமத்தை புரிஞ்சுக்கிட்டு ஜில்லுன்னு கொடுத்தா நல்லா இருக்கும் என்றனர்.





















