மயிலாடுதுறையில் முடக்கப்படும் கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகள் - எஸ்.பி. அதிரடி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 23 கஞ்சா வியாபாரிகளின் வங்கி கணக்குகளை முடக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா நடவடிக்கை எடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெருகிவரும் கஞ்சா, குட்கா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை தடுப்பதற்கு தமிழக காவல்துறையினர் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் "ஆபரேஷன் கஞ்சா வேட்டை" என்ற பெயரில் போதைபொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆபரேஷனை தொடங்கிவைத்து உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள், இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இருந்த போதிலும், கஞ்சா விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த முடியாத காரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள என்.எஸ்.நிஷா கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், தமிழக டிஜிபி. சைலேந்திரபாபு அறிவித்த கஞ்சா 2.0 திட்டத்தினை பயன்படுத்தி 2021- 2022 ஆம் ஆண்டுகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 60 வியாபாரிகளின் சொத்துக்களை பட்டியலிட மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கஞ்சா வழக்குகளில் உள்ள 23 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 2 வது கட்டமாக 30 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா வங்கிகளுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து மீதமுள்ள கஞ்சா வியாபாரிகள் வங்கி கணக்குகள் தனிப்படையினரால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், கஞ்சா வியாபாரிகளின் ஒரு கார் மற்றும் நான்கு டூவீலர்களை நேரடியாக ஏலம் விடுவதற்கு மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா உத்தரவிட்டுள்ளதுடன், மீதமுள்ள கஞ்சா வியாபாரிகள் வாகனங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை நடைபெறும் பகுதிகளில் அப்பகுதி மக்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும், அவ்வாறு இதுகுறித்து தகவல் அளிப்பவர்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்றும் மாவட்டக் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்