இந்து கடவுள் தவறாக சித்தரிப்பு; ஜவாஹிருல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய அர்ஜூன் சம்பத் வலியுறுத்தல்
தி.மு.க., கூட்டணி கட்சிகள், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடத்திய ஆர்ப்பாட்டங்களில், தமிழகத்தில் படிக்கின்ற குக்கி இனம் சார்ந்த மாணவர்களையும் பங்கெடுக்க வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்: மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மதக்கலவரத்தை துாண்டும் விதமாகவும், இந்து கடவுளை தவறாக சித்திரிக்கும் வகையில் நடந்த எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அர்ஜூன் சம்பத் தஞ்சாவூர் எஸ்.பி.,யிடம் மனு அளித்தார்.
தஞ்சாவூர், போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன்சம்பத், மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோர், எஸ்.பி., ஆஷிஷ் ராவத்திடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடந்த நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களில் ராமர், சீதை, லட்சுமணர், வடிவங்களில் மோடி, அமித்ஷா, சீதாதேவி ஆகியோரை நிர்வாணமாக வரைந்து தேசிய கொடியின் வண்ணம் போட்டு தேச பக்தர்களின் மனம் புண்படும்படியாகவும், மதக்கலவரத்தை துாண்டும் விதமாகவும் விளம்பரங்கள் இருந்தன.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா பெயரில் இது வெளியிடப்பட்டுள்ளதால், அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
தி.மு.க., கூட்டணி கட்சிகள், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடத்திய ஆர்ப்பாட்டங்களில், தமிழகத்தில் படிக்கின்ற குக்கி இனம் சார்ந்த மாணவர்களையும் பங்கெடுக்க வைத்துள்ளனர். போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துவது சட்டப்படி தவறானதாகும்.
தி.மு.க, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பி மோரே பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கும், இந்திய ஒருமைப்பாட்டிற்கும் விரோதமாக கிறிஸ்தவ மாவோயிச நக்சல் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். இதை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது.