ஐந்தாயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் மாபெரும் திட்டம்... அரியலூரில் தொடக்கம்
சிறுகுறிஞ்சான், முடக்கத்தான், செந்நாயுருவி, நந்தியாவட்டை, நஞ்சறுப்பான், கல்அத்தி, விடர்தாலை, செங்காளி, நாட்டு முருங்கை, வெண்நாவல் என500 வகைகளில் 5000 மரங்கள் மற்றும் மூலிகைகள் நடவு செய்யும் திட்டம்

அரியலூர் மாவட்டத்தில் 5000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை கலெக்டர் பொ.ரத்தினசாமி தொடக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் சோலைவனம் அறக்கட்டளை தொண்டு நிறுவனம், எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்புகளின் சார்பில் 5000 மரக்கன்றுகள் நடவு செய்யும் மாபெரும் திட்டத்திற்கு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இத்திட்டத்தை மாவட்ட கலெக்டர் பொ.ரத்தினசாமி இன்று தொடங்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்.தீபக் சிவாச் கலந்துகொண்டார். இந்திய அரசின் வனக்கொள்கையானது மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு 33 சதவீதம் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டின் கணக்கின்படி வனப்பரப்பானது 23.84 சதவீதமாக உள்ளது அதனை எதிர்வரும் 10 ஆண்டுகளில் 33 சதவீதம் என்ற இலக்கை எட்டும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டத்தை செயல்படுத்த மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தலைமையில், மாவட்ட பசுமை குழு உருவாக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை துறை தோட்டக்கலைத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக மரக்கன்றுகளை நடவு செய்து அரியலூர் மாவட்ட வனப்பரப்பை அதிகரிக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்றத்திற்கு எதிரான தமிழ்நாடு உயிர் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கடந்த 2022-23 ஆண்டு 1.40 லட்சம் மரக்கன்றுகளும், 2023-24 ஆம் ஆண்டு 4.17 லட்சம் மரக்கன்றுகளும், 2024-25 ஆம் ஆண்டு 2.78 லட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளது. 2025-26 ஆம் ஆண்டு சுமார் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து நாற்றங்கால் உற்பத்தி செய்ய நாற்றாங்கால் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று அரியலூர் மாவட்டம், வாரணாசி கிராமத்தில் சிறுகுறிஞ்சான், முடக்கத்தான், செந்நாயுருவி, நந்தியாவட்டை, நஞ்சறுப்பான், கல்அத்தி, விடர்தாலை, செங்காளி, நாட்டு முருங்கை, வெண்நாவல் உள்ளிட்ட 500 வகைகளில் 5000 மரங்கள் மற்றும் மூலிகைகள் நடவு செய்யும் மாபெரும் திட்டத்தை அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ. ரத்தினசாமி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், ரியலூர் மாவட்டத்தினை சோலைவனப் பகுதிகளாக மாற்றும் பொருட்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய நிகழ்வுகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட வன அலுவலர் த.இளங்கோவன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அரசு அலுவலர்கள், சோலைவனம் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மாறி வரும் காலநிலை மாற்றத்தை சமாளிக்க மரக்கன்றுகள் நடுவதால் வெப்பம் தணியும். மேலும் மண் வளம் பெருகும். எனவே அனைவரும் மரக்கன்றுகள் வளர்ப்பதில் ஆர்வமும், பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

