தஞ்சை, தேப்பெருமாநல்லூரில் அரசு அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் உள்ள குடவாசல் வட்டாட்சியர் ராஜன்பாபுவுக்கு சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்: இலவச வீட்டு மனை பட்டா முறைகேடு மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக திருவாரூரில் நெடுஞ்சாலைதுறை மற்றும் நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றும் பெண் அதிகாரியின் தஞ்சாவூர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
திருவாரூர் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்தவர் முத்துமீனாட்சி. இவர் தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலை நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியராக பணிபுரிந்த போது நத்தம் புறம்போக்கு இடத்தில் வீட்டு மனைபட்டா வழங்கியதும், அந்த இடத்தை நெடுஞ்சாலைதுறை விரிவாக்க பணிக்காக மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.
இதன்பேரில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இதில் முத்து மீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, விஏஓ துர்காராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சிவகுமார், சதீஷ்குமார், வினோத்குமார், திருப்பாலியூர் சுகுமாரி ஆகிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை திருமுருகன் நகரில் உள்ள திருவாரூரில் நெடுஞ்சாலைதுறை மற்றும் நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றும் மணிமேகலையின் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூரில் உள்ள குடவாசல் வட்டாட்சியர் ராஜன்பாபுவுக்கு சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.