சீர்காழியில் மழை பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலை - ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
மழை பாதிப்புகளை பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தண்ணீரில் மூழ்கிய நெற் பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட ஆச்சாள்புரம், நல்லூர், பன்னீர் கோட்டகம், வேட்டங்குடி, திருநகிரி, மங்கைமடம், திருவெண்காடு, பூம்புகார், ராதாநல்லுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட நெற் பயிர்கள், வீடுகளை பார்வையிட்டு விவசாயிகள், பாதிக்கப்பட்ட மக்களிடம் பாதிப்புகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். மழையால் சேதமடைந்த வீடுகளில் வசிக்கும் மக்களிடம், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாஜக சார்பில் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து ராதாநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் பார்வையிட்டுள்ளார். ஆனால், அவர் எந்த புதிய நிவாரணத்தையும் அறிவிக்கவில்லை. பேரிடர் பாதிப்புகளுக்காக ஏற்கனவே மத்திய அரசு வழங்கக் கூடிய நிவாரணத் தொகைகளைதான் தமிழக அரசு அறிவித்துள்ளதை தவிர, புதிதாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மக்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் தற்போது வழங்கியுள்ள ஆயிரம் ரூபாய் எந்தவிதத்திலும் போதுமானது இல்லை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 ஆயிரம் ரூபாயும், பயிர் பாதிப்புக்கு ஏக்கருக்கு தல 30 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும். தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணியாற்றவில்லை. வடிகால் வாய்க்கால்கள் சரி வர பராமரிக்கவில்லை. விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை முழுமையான அளவில் காப்பீட்டு நிறுவனம் மூலம் கிடைக்கவும், விவசாயிகள் பயிர்க்காப்பீடு செலுத்துவதற்கான தேதியை நீட்டிக்கவும், மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கவும் மத்திய அரசை அணுகி பாஜக வலியுறுத்தும்.
Jayam Ravi: முருகனின் ஆசீர்வாதம்..50வது திருமண நாளை கொண்டாடிய பெற்றோர்..நெகிழ்ச்சியில் ஜெயம்ரவி!
பேரிடர் சூழலில் மக்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால், 100 வேலை திட்டத்தில் என்ன சம்பளம் கிடைக்குமோ, அதை பேரிடர் நிதியிலிருந்து அதிக பட்சமாக 30 நாட்களுக்கு கொடுக்கலாம் என மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. அதை நடைமுறைப்படுத்த வேண்டும். சிதம்பரத்தில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் பேருந்து தீப்பற்றி எரிந்தது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும் என்றார். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட பல்வேறு பாரதிய ஜனதா கட்சியினர் உடன் இருந்தனர்.
ICC Rules: நேபாள அணிக்கு ஆதரவாக 5 பெனால்டி ரன்கள்... ஐசிசி விதிகளை மீறிய முதல் அணி இதுதான்!