Statue : இனி நினைத்த இடத்தில் சிலை வைக்கவோ திறக்கவோ முடியாது... உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
இமானுவேல் சேகரன் சிலையை அகற்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி விருதுநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விருதுநகரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், "அம்மச்சியாபுரம் பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலிக்குமாறு மனுத்தாக்கல் செய்திருந்தேன். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அனுமதியின்றி செப்டம்பர் 10 ஆம் தேதி சிலை வைக்கப்பட்ட பின், நடைபெற்ற அமைதி கூட்டத்தில் முறையான அனுமதி பெறும் வரை சிலையை தகரம் அமைத்து மூடிவைக்கும் படி முடிவு எடுக்கப்பட்டது. அது முறையாக பின்பற்றப்பட்டதை நீதிபதியே பாராட்டினார். இந்த சூழலில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் முறையான அனுமதி இன்றி வைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுமாறு பிறப்பித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், "பட்டா இடத்திலேயே சிலை வைக்கப்பட்டுள்ளது. தற்போது டின் தகரம் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ள நிலையில், சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டது ஏற்கத்தக்கதல்ல" என வாதிடப்பட்டது.
அரசுத்தரப்பில், " அந்த பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. மனு நிலுவையில் இருக்கும் போதே, அனுமதி பெறாமல் சிலை வைக்கப்பட்டுள்ளது. ஆகவே தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது" என வாதிடப்பட்டது.
அதைத்தொடர்ந்து நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயணா, "மனுதாரர் தரப்பில் சிலையை வைக்க அனுமதி கோரிய மனு நிலுவையில் இருக்கும் வரை சிலையை திறக்க மாட்டோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் மனுதாரரின் மனுவை நிலுவையில் வைத்திருப்பது ஏன்? இதனால் தேவையின்றி காவல்துறையினரே சிரமத்திற்கு ஆளாகின்றனர். முன்னாள் முதல்வரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் நேரடியாக அனுமதி வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவே அறிவுறுத்தப்பட்டது. ஆகவே முறையான அனுமதி பெறும் வரை சிலையை திறப்பதோ, மரியாதை செய்வதோ கூடாது. அதற்கு பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகளை வைக்கக்கூடாது. அதற்கு அதிகாரிகளும் அனுமதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.