தஞ்சை பெரிய கோவிலில் 750 கிலோ பச்சரிசி சாதம், 600 கிலோ எடை காய்கறிகளால் சிவனுக்கு அன்னாபிஷேகம்
’’லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், கல்லணை கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது’’
ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு உலகப்பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னாபிஷேகம் நாளில் சிவலிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்படும் ஒவ்வொரு பருக்கை சாதமும் ஒரு சிவலிங்கமாக கருதப்பட்டு வணங்கப்படும்.
ஐப்பசி மாதமும், அந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அன்று அனைத்து சிவாலயங்கள் தோறும் அன்னாபிஷேகம் நடைபெறும். லிங்க திருமேனியாக இருக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு அந்த அன்னம் பிறகு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தான் சிவனுக்கு நிகரானவரே என்று பிரம்மன் நினைத்தார். அதனால் பிரம்மனின் ஒரு தலையை சிவபெருமான் தன்னுடைய கைகளால் கொய்தார். அப்படி துண்டிக்கப்பட்ட தலை, சிவபெருமானின் கையை கவ்விக்கொண்டது. ஈசனுக்கு, பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. கையை கவ்விக்கொண்ட பிரம்மனின் கபாலம், பிச்சை பாத்திரமாக மாறியது. அந்த கபால பிச்சை பாத்திரத்தில் அன்னமிட்டு நிறையும் போதுதான், சிவபெருமானின் கையைவிட்டு கபாலம் பிரியும் என்பது அவருக்கான சாபம். சிவபெருமான் காசிக்குச் சென்று பிச்சை பாத்திரம் ஏந்தியபோது, அவருக்கு அன்னபூரணி அன்னமிட்டதாக ஐதீகம்
இதனால் அவரது அன்பினால் கபாலம் அன்னத்தால் நிரம்பியது. இதையடுத்து பிரம்மனின் கபாலம் கீழே விழுந்ததோடு, ஈசனின் பிரம்மஹத்தி தோஷமும் நீங்கியது. அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்ட தினம், ஐப்பசி மாத பௌர்ணமி ஆகும். எனவேதான் அன்றைய தினம் சிவபெருமானுக்கு, அன்னபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அதனால் அவருக்குப் பதினொரு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்வது வழக்கம். அந்த அபிஷேகங்களில் மிகவும் சிறப்பானது, அன்னாபிஷேகம்.
தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அப்படிப்பட்ட அன்னத்தை தனக்கானதாக மட்டுமே வைத்திருப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களால் இறைவனையும், இறையருளையும் அடைய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே ஐப்பசி பௌர்ணமி நாளில் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற நாளில் தஞ்சாவூரில் உலக புகழ்பெற்ற பெரிய கோயில் எனும் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் உலகிலேயே மிகப் பெரியதாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், 13 அடி உயரம், 23.5 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் என பெரிய லிங்கம் என்ற சிறப்பு உண்டு. இத்தகையை சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடை பெறுவது வழக்கம். இந்தாண்டு பக்தர்களால், 750 கிலோ பச்சரிசி, 600 கிலோ காய்கள், இனிப்பு வகைகள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. கோயிலின் நடை திறக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு, லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள அன்னம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.